YouTurn

மத்தியப் பிரதேசத்தில் கோதுமை மழையில் நனைந்ததைத் தமிழ்நாடு எனத் தவறாகப் பரப்புகின்றனர்

மத்தியப் பிரதேசத்தில் கோதுமை மழையில் நனைந்ததைத் தமிழ்நாடு எனத் தவறாகப் பரப்புகின்றனர்

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ரேஷன் கடை அரிசியில் புழுத்த நாற்றமடிப்பதேன்..? அண்ணனின் கேள்விக்கான பதில் இதோ…


X link

விரிவான விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு மேடையில் பேசுகையில், ஒரே வயலில் விளைய வைத்த நெல் விற்பனைக்கு கடைக்கு வரும்போது மணக்கிறது. அதுவே ரேஷன் கடைக்கு வரும்போது நாற்றம் அடிக்கிறது எனப் பேசி இருந்தார்.




சீமான் பேசியதை நாம் தமிழர் கட்சியினர் மேற்கோள்காட்டி அரிசி புழுத்த நாற்றமடிக்க இதுதான் காரணமென வீடியோ ஒன்றைச் சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர். அதில், திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள உணவுத் தானியம் மழையில் நனைகிறது. 



உண்மை என்ன?

பரவக்கூடிய வீடியோவில் ‘kedarsi rohi’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பெயர் இருப்பதைக் காணமுடிகிறது. அப்பக்கத்தில் இந்த வீடியோ கடந்த ஏப்ரல் 10ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. 




அதில், "IPL போட்டியின்போது மழை வந்திருந்தால் மைதானத்தைப் பாதுகாக்க ஏற்பாடுகள் இருந்திருக்கும். ஆனால், விவசாயிகளின் பயிரைப் பாதுகாக்க எந்த ஏற்பாடும் இல்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது மத்தியப் பிரதேச மாநிலம், சியோனி மால்வா பகுதியில் நடந்ததாகக் அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக ‘Free Press Journal’ தளத்தில் ஏப்ரல் 11ம் தேதி செய்தி வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் அறுவடை முடிந்ததும் உலர்த்தி வைக்கப்பட்டிருந்த கோதுமை மழையில் நனைந்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.



தமிழ்நாட்டில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்த சம்பவம் ஏதேனும் சமீபத்தில் நடந்ததா எனத் தேடினோம். கடந்த மே மாதத் தொடக்கத்தில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதமடைந்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதே போல் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது தொடர்பாக ‘நக்கீரன்’ தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.



ஆனால், பரவக்கூடிய வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது கிடையாது. அது மத்தியப் பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்டக் கோதுமை மழையில் நனைந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ.

முடிவு:

ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி, மழை நீரில் நனைந்து வீணாகிறது என நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளத்தில் பரப்பும் வீடியோ தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. அது மத்தியப் பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்ட கோதுமை மழையில் நனைந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க