யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோவில் இருப்பவர் ஷிம்ஜிதா முஸ்தபா அல்ல. அஸ்வதி என்ற பெண் கடந்த 2023ஆம் ஆண்டு கேரளாவில் நிகழ்ந்த வேறொரு சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கேரளப் பேருந்தில் பயணித்த தன்னிடம் பாலியல் சீண்டல் செய்ததாகக் கூறி ஷிம்ஜிதா முஸ்தபா என்றப் பெண், தீபக் (42) என்ற நபரை குற்றம் சாட்டி சமீபத்தில் சர்ச்சையான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலானது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தீபக் அவரது அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் ஷிம்ஜிதா முஸ்தபா தற்போது கேரளக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில் ஒரு பெண், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, ஜீப்பில் ஏற்றப்படுவதையும், பின்னர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் இருப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது.
நீதி வென்றது🔥🔥
#JusticeForDeepak pic.twitter.com/4xtjfLq4ly
கேரளாவில் ரீல்ஸ் மோகத்தில் இந்த பெண் செய்த ஒரு செயல் ஒரு அப்பாவியான ஒருவரின் உயிரை பறித்தது 😏😡
பத்து ஆண்டுகள் சிறை ஒரு கோடி ரூபாய் இழப்பீடு சொத்துக்கள் பறிமுதல் 🔥🔥
கேரளா சம்பவத்தில் நீதி வென்றது..!!
ஆனால் ரீல்ஸ் மோகத்தால் ஒரு குடும்பத்தின் எதிர்காலமே போனது உயிர் பறிபோனது.
யார் இதற்கு பொறுப்பேற்பது.?
உறுதியாக ஒரு பெண் என்பதால் சட்டங்கள் அனைத்துமே வளைந்து கொடுக்கும்.
ஆனால் ஒரு பெண்ணின் ரீல்ஸ் மோகத்தால் ஒரு உயிர் பறிபோனதற்கு யார் காரணம்.? pic.twitter.com/YHdjfvOvAz
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை ஆய்வு செய்ததில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, ஜீப்பில் ஏற்றப்படும் பெண்ணின் தோற்றமும், ஷிம்ஜிதா முஸ்தபாவின் தோற்றமும் வேறு வேறாக இருந்ததைக் காண முடிந்தது.
சந்தேகம் எழவே, வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் வீடியோ குறித்து “News Keralam” ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் கடந்த 2023 நவம்பர் 24 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. வீடியோவில், கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் அஸ்வதி என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் பரவி வரும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளவாறு ஷிம்ஜிதா முஸ்தபா கேரளக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்தும் தேடினோம். "42 வயதான தீபக்கின் மரணத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வடகரையைச் சேர்ந்த ஷிம்ஜிதா முஸ்தபா தலைமறைவானதால், கோழிக்கோடு காவல்துறையினர் தேடி வருகின்றனர்" என்றே செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் கைது செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் ஊடகங்களில் இல்லை.

இதன் மூலம், கேரளப் பேருந்து சர்ச்சை வீடியோ சம்பவத்தில் தொடர்புடைய ஷிம்ஜிதா முஸ்தபா கைது செய்யப்பட்டதாகக் கூறி பரவும் செய்தி தவறானது. பரவி வரும் வீடியோவில் இருப்பவர் ஷிம்ஜிதா முஸ்தபா அல்ல. அஸ்வதி என்ற பெண் கடந்த 2023ஆம் ஆண்டு கேரளாவில் நிகழ்ந்த வேறொரு சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், கேரளப் பேருந்து சர்ச்சை வீடியோ சம்பவத்தில் தொடர்புடைய ஷிம்ஜிதா முஸ்தபா கைது செய்யப்பட்டதாகப் பரவும் வீடியோ தவறானது என்பது தெளிவாகிறது.
குறிப்பு:
தற்போது வெளிவந்துள்ள செய்திகளின் படி, கேரளப் பேருந்து சர்ச்சை வீடியோ சம்பவத்தில் தொடர்புடைய ஷிம்ஜிதா முஸ்தபா கேரளக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் பரவி வரும் வீடியோ அஸ்வதி என்ற பெண் கடந்த 2023ஆம் ஆண்டு கேரளாவில் நிகழ்ந்த வேறொரு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்டது.