யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2023 ஆம் ஆண்டு முதல், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மொத்த நாய்கள் - 9,743, அதற்கான மொத்த செலவினம் ரூ.1,44,83,750/- என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் உறுதி செய்துள்ளார்.
பரவிய செய்தி
2024-2025 ஆம் ஆண்டு தாம்பரம் மாநகராட்சியில் Animal birth controlக்கு 68 கோடியே 99 லட்சத்து 68 ஆயிரத்து நூற்றி முப்பத்தி இரண்டு ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நாய்கள் உள்ளிட்ட மிருகங்களின் பிறப்பை குறைக்க ரூ.68,99,68,132 செலவு செய்ததாக தாம்பரம் மாநகராட்சி ஒன்றிய அரசிற்கு கொடுத்த அறிக்கை.

விரிவான விளக்கம்
தாம்பரம் மாநகராட்சியில் கடந்த ஒரு ஆண்டில் நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.66 கோடி செலவிடப்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் அப்பதிவுகளில், “நாய்கள் உள்ளிட்ட மிருகங்களின் பிறப்பை குறைக்க ரூ.68,99,68,132 செலவு செய்ததாக தாம்பரம் மாநகராட்சி ஒன்றிய அரசிற்கு கொடுத்த அறிக்கை இது“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024-2025ம் ஆண்டு
தாம்பரம் மாநகராட்சியில்
Animal birth controlக்கு
68கோடியே 99 லட்சத்து68ஆயிரத்து
நூற்றி முப்பத்தி இரண்டு ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
நாய்கள் உள்ளிட்ட மிருகங்களின் பிறப்பை குறைக்க ரூ.68,99,68,132 செலவு செய்ததாக தாம்பரம் மாநகராட்சி ஒன்றிய அரசிற்கு கொடுத்த அறிக்கை. pic.twitter.com/iljEfoM2ZY
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், 2024-2025 ஆம் நிதியாண்டிற்காக தாம்பரம் மாநகராட்சி வெளியிட்டிருந்த “Trial Balance” அறிக்கை கிடைத்தது.
அந்த அறிக்கையில் விலங்குகளுக்கான இனக்கட்டுப்பாடு (Animal Birth Control) என்று குறிப்பிட்டு, 55,20,173 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. கழிவுகள் நீக்கம் (Garbage Clearance) என்று குறிப்பிட்டே ரூ.66 கோடி செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உண்மையான அறிக்கையின் புகைப்படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பியுள்ளனர். மேலும் இது குறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர், “2023 ஆம் ஆண்டு முதல், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மொத்த நாய்கள் - 9,743, அதற்கான மொத்த செலவினம் ரூ.1,44,83,750/- செலவிடப்பட்டது” என்றும் கூறியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் கடந்த ஒரு ஆண்டில் நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.66 கோடி செலவிட்டதாகப் பரவும் வதந்தி !
வதந்தி
'தாம்பரம் மாநகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை செய்த வகையில் செலவு 66 கோடி இந்த 1 வருடத்தில் மட்டும்' என்று சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரப்பப்படுகிறது.… https://t.co/GPsNZG7BgJ pic.twitter.com/W0wBNSzatm
மேலும், இது குறித்த விளக்கத்தில், “ 2023-ம் ஆண்டில் பாரதிபுரம், அனகாபுத்தூர், குண்டுமேடு பகுதிகளில் உள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் 1,782 நாய்கள் பிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. நாய் ஒன்றுக்கு ரூ.1,650. (பிடிப்பு செலவு உட்பட) மொத்த செலவினம் ரூ.29,40,300/- ஆகும். 2024-ம் ஆண்டில் 2,557 நாய்கள் பிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. நாய் ஒன்றுக்கு ரூ.1,450/- (நாய் பிடிப்பவர் செலவு அல்லாது) மொத்த செலவினம் ரூ.37,07,650 ஆகும். 2025-ம் ஆண்டில் 5,404 நாய்கள் பிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. நாய் ஒன்றுக்கு ரூ.1,450/- (நாய் பிடிப்பவர் செலவு அல்லாது) செலவினம் ரூ.78,35,800/- ஆகும்“ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
முடிவு:
நம் தேடலில், தாம்பரம் மாநகராட்சியில் கடந்த ஒரு ஆண்டில் நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.66 கோடி செலவிடப்பட்டதாகக் கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.