யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தி.மு.க. தலைவர் கருணாநிதியை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று கோரி திமுகவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்தே கருணாநிதி அவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பரவிய செய்தி
உண்மையில் எடப்பாடி மனித நேயம் உள்ள நல்ல மனிதர் அதனால தான் உங்கப்பா கடல்கறையில் தூங்கி கொண்டு இருக்கிறார்!

விரிவான விளக்கம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மனிதநேயத்தால் தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டது என்று பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மையில் எடப்பாடி மனித நேயம் உள்ள நல்ல மனிதர் அதனால தான் உங்கப்பா கடல்கறையில் தூங்கி கொண்டு இருக்கிறார்! pic.twitter.com/vHK7zlF5LK
உண்மை என்ன?
முதலில் எடப்பாடி பழனிசாமி தான் இதற்கு அனுமதி அளித்தாரா என்பது குறித்து தேடினோம். அப்போது விகடன் ஊடகத்தில் ஆகஸ்ட் 08, 2018 அன்று ”கருணாநிதி மறைவு முதல்... மெரினாவில் அனுமதி மறுப்பு வரை... நள்ளிரவில் நடந்தது என்ன ?” என்ற தலைப்பில் வெளியான கட்டுரை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் கருணாநிதி அவர்களின் உடலை அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய திமுகவினர் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். ஆனால் அப்போதைய அதிமுக அரசு அதற்கு அனுமதி மறுத்தது. சர்தார் படேல் சாலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக, காந்தி மண்டபம் அருகில் இரண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்வதாகவும் கூறியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிய போது, BBC ஊடகத்தில் “கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கீடு: தமிழக அரசு, திமுக தரப்பு வாதங்கள் என்ன?” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று கோரி திமுகவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்தே கருணாநிதி அவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்று கூறப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை மறைத்து எடப்பாடி பழனிச்சாமியின் மனிதநேயத்தால் தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டது என்று தவறாகப் பரப்பி வருகின்றனர்.