யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
விசாகப்பட்டினத்தில் இறந்த இளைஞரின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டதை, கொல்கத்தாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் மரணத்துடன் தொடர்புப்படுத்தி தவறாக பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமல் காங்கிரஸின் கொல்கத்தா மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட உடலுக்கு மரியாதை செலுத்திய சக மருத்துவர்கள்.
விரிவான விளக்கம்
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் உடலுக்கு அம்மருத்துவமனையில் உள்ள பணியாளர்கள் அனைவரும் மரியாதை செலுத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோவில் ‘Pinnacle’ என்றிருப்பதைக் காணமுடிகிறது. இப்பெயரைக் கொண்டு தேடியதில் இந்த மருத்துவமனை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருப்பதை அறியமுடிந்தது.
மேற்கொண்டு வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இதுதொடர்பாக ’Dainik Bhaskar’ ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்று கிடைக்கப்பெற்றது. அதில், இறந்த மகனின் உடல் உறுப்புகளைத் தந்தை தானம் செய்ததை மருத்துவமனையில் உள்ள பணியாளர்கள் பாராட்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் ’News 18’ தளத்திலும் கடந்த ஜூன் 2ஆம் தேதி செய்தி வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினத்தில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வரும் 'விபின் மேத்தா' என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.
உடல் உறுப்புகள் தானம் செய்ததை ஊக்குவிக்கும் வகையில் மருத்துவமனையில் உள்ள பணியாளர்கள் அனைவரும் கைகளைத் தட்டி பாராட்டியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை மேற்குவங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்பப்படுகிறது.
முடிவு:
மேற்குவங்கத்தில் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட பயிற்சி பெண் மருத்துவருக்கு அம்மருத்துவமனை பணியாளர்கள் மரியாதை செலுத்தியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. இது விசாகப்பட்டினத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனை பணியாளர்கள் மரியாதை செலுத்திய வீடியோ.