யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
குழந்தை கடத்தல் வதந்தி தொடர்பாக சந்தேகப்பட்டு மேற்கு வங்காளத்தில் ஒரு பெண் தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
இது மணிப்பூர் அல்ல, மேற்கு வங்கம். இந்து பெண் எப்படி முஸ்லிம்களால் கொடூரமாக தாக்கப்பட்டார் என்று மம்தா அவர்களே பாருங்கள். மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜி இந்தி கூட்டணி ஆட்சியில் இந்துபெண் தாக்கபடுகிறார் காவல்துறை முன்னிலையில்..
விரிவான விளக்கம்
மேற்கு வங்காளத்தில் ஒரு இந்துப்பெண் முஸ்லீம்களால் தாக்கப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் வீடியோவில், காவல்துறையினர் முன்னிலையிலே ஒரு பெண் சுமார் ஐம்பது பேர் சூழ்ந்திருக்கும் கூட்டத்தின் நடுவே கடுமையாக தாக்கப்படுவதைக் காணமுடிகிறது.
இதனை பாஜகவினர் பலரும், இது மணிப்பூர் அல்ல, மேற்கு வங்காளம் என்று கூறி மதரீதியாக சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காணமுடிகிறது.
It is not Manipur it is West Bengal and Mamata's Please see how a Hindu Girl was brutally assaulted by Muslims.
— Thiruparkadal Kumarasamy (@TK_TUTICORIN) July 24, 2024
இது மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜி இந்தி கூட்டணி ஆட்சியில் இந்துபெண் தாக்கபடுகிறார்.
காவல்துறை முன்னிலையில்.
விளக்கு புடிக்கும் கனி அக்காகாகாகா. 😆 pic.twitter.com/W6AnZ78P49
It is not Manipur it is West Bengal and Mamata's Please see how a Hindu Girl was brutally assaulted.
— SSK Social lnfo (@ssk_lnfo) July 24, 2024
இது மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜி இந்தி கூட்டணி ஆட்சியில் இந்துபெண் தாக்கபடுகிறார்.
காவல்துறை முன்னிலையில்.
Kindly do something @KanimozhiDMK @khushsundar pic.twitter.com/KtoJaiQ6hg
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை ஆய்வு செய்து பார்த்ததில், அதில் காவல்துறை வாகனத்தில் "பராசத் போலீஸ்" என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது.

எனவே பரவி வரும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிய, பராசத் காவல்நிலையத்தை யூடர்ன் தரப்பிலிருந்து தொடர்பு கொண்டு பேசினோம். பராசத் காவல்நிலையத்தின் SDPO அதிகாரியான வித்யாகர் அஜிங்க்யா ஆனந்த் ஐபிஎஸ், இது குறித்து பேசுகையில், "ஜூன் 19, 2024 அன்று ஒரு குழந்தை காணாமல் போனது. காணமல் போன குழந்தையின் இறந்த உடலும் கைப்பற்றப்பட்டது. இந்த குழந்தையின் மாமா, பொதுமக்கள் அனைவரிடமும் குழந்தைகள் பலரும் கடத்தப்பட்டு கொல்லப்படுவதாக தவறான தகவலைப் பரப்பினார். இதை உண்மை என்று நினைத்து ஊர்மக்களும் பரவி வரும் வீடியோவில் காட்டப்பட்டுள்ள பெண், குழந்தையுடன் நின்று கொண்டிருந்ததால், அவர் குழந்தை கடத்தலில் தொடர்புடையவர் என்று நினைத்து தாக்க ஆரம்பித்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பெண்ணையும், குழந்தையையும் மீட்டனர். தற்போது இருவரும் பாதுகாப்பாக உள்ளனர். குழந்தை கடத்தலுக்கும் இந்த பெண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையான குற்றவாளிகளில் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு எண் 355 (dt 19.06.24.u/s 341/323/354/186/188/307/332/333/506/509/34IPC r/w 3 PDPP Act) பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பலரும் பரவி வரும் வீடியோவை, மதரீதியாக தொடர்புபடுத்தி, வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக தவறாகப் பரப்பி வருகின்றனர்" என்றும் கூறினார்.
இதுகுறித்து மேலும் தேடியதில், பரவி வரும் வீடியோ குறித்து "பராசத் கொலை: சொந்த மாமாவால் கொல்லப்பட்ட குழந்தை! குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்த பின்னர் போலீஸார் தெரிவித்தனர்" ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் ஜூன் 23, 2024 அன்று என்று குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.
இதன்மூலம், பரவி வரும் வீடியோவை பலரும் மேற்கு வங்கத்தில் ஒரு இந்துப்பெண் முஸ்லீம்களால் தாக்கப்படுவதாகக் கூறி மதரீதியாக தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், மேற்கு வங்கத்தில் ஒரு இந்துப்பெண் முஸ்லீம்களால் தாக்கப்படுவதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், குழந்தை கடத்தலில் தொடர்புடைய பெண் என்று கூறி பொதுமக்கள் தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோவை பலரும் மதரீதியாக பரப்பி வருகின்றனர் என்பதையும் அறியமுடிகிறது.
