யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் என்ற இடத்தில் விராட் கோலிக்கு ஆள் உயர தங்க சிலை நிறுவப்பட்டுள்ளதா?
பரவிய செய்தி
அமெரிக்காவில் கோலிக்கு சிலை! அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ஆளுயர சிலை திறப்பு.
விரிவான விளக்கம்
மேற்கு இந்தியத்தீவுகளில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெற்றி பெற்றது. இதனையடுத்து நாடு திரும்பிய இந்திய அணிக்கு மும்பையில் மிகப்பெரிய உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு, ஆள்உயர சிலை திறக்கப்பட்டுள்ளது என்று கூறி, தினமலர், தினத்தந்தி மற்றும் OneIndia தமிழ் போன்ற ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை பலரும் தங்களது சமூக ஊடகப்பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காணமுடிகிறது.
குறிப்பாக OneIndia தமிழ் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், “அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் என்ற இடத்தில் விராட்டுக்கு தங்க சிலை நிறுவப்பட்டுள்ளது. 'டுரோஃபிளேக்ஸ்' என்ற கட்டில், மெத்தை தயாரிக்கும் நிறுவனம் விராட்டுக்கு சிலை வைத்துள்ளது. அந்நிறுவனத்துக்கு பிராண்ட் அம்பாசிடராக விராட் கோலி இருப்பதால் விளம்பரத்துக்காக டைம்ஸ் ஸ்கொயர் இடத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது விராட்டின் தங்க சிலை புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் விராட் கோலியின்
— Thanthi TV (@ThanthiTV) June 24, 2024
பிரம்மாண்ட சிலை#Newyork #ViratKohli #Cricket #Statue pic.twitter.com/Q7BGKHh8Zt
அமெரிக்காவில் ஜொலிக்கும் விராட் கோலி.. பிரமாண்ட தங்க சிலையின் புகைப்படங்கள்! எதுக்கு? யார் வைத்தது?
— Oneindia Tamil (@thatsTamil) June 25, 2024
More Details: https://t.co/Z94CyWnIlK#Viratkohli #GoldenStatue #Duroflex #விராட்கோலி pic.twitter.com/Q9nSCr5ws9
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகளில் உள்ளவாறு அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் என்ற இடத்தில் ஜூன் 15 அன்று கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ஆள் உயர தங்க சிலை திறக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில், @timessquarenyc இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜூன் 28, 2024 அன்று டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.

அதில், விராட் கோலிக்கு சிலை வைத்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை. சிலை வைத்தாக சொல்லப்பட்ட இடத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளதையே அதில் பார்க்க முடிந்தது. மேலும் @timessquarenyc இன்ஸ்டாகிராம் பக்கம் பிரத்யேகமாக அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் என்ற பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை/சிறப்புகளை தொகுத்து தேதிவாரியாக பதிவுசெய்து வருகிறது. இந்தப் பக்கத்திலும் விராட் கோலிக்கு சிலை வைக்கப்பட்டது குறித்து எந்தப் பதிவுகளும் இல்லை என்பதை உறுதிசெய்ய முடிந்தது.
மேலும் Duroflexworld தனது யூடியூப் பக்கத்தில், விராட் கோலியின் சிலையைக் குறிப்பிட்டு ஜூன் 23 அன்று, “டியூரோஃப்ளெக்ஸ் ஆன் கிங்ஸ் டூட்டி | டைம்ஸ் ஸ்கொயர், நியூயார்க் நகரம் | விராட் கோலி | CGI” என்று குறிப்பிட்டு வீடியோவைப் பதிவிட்டிருந்தது.
இதே போன்று, Duroflexworld தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், "CGI video" என்று குறிப்பிட்டு, தனது யூடியூப்பில் வெளியிட்டிருந்த அதே வீடியோவை வெளியிட்டிருந்தது. இதன்மூலம் பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது, Duroflexworld அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் வெளியிட்ட CGI அனிமேஷன் வீடியோவின் ஒரு காட்சி என்பதை அறியமுடிகிறது. இதனை பலரும் உண்மையான சிலை என்று நினைத்து சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
இதற்கு முன்பும் CEAT Tyres வெளியிட்ட CGI விளம்பர வீடியோவை, "மும்பையில் காணப்பட்ட வித்தியாசமான காட்சி” என்று குறிப்பிட்டு தினகரன் ஊடகம் உட்பட, பலரும் சமூக ஊடகங்களில தவறாகப் பரப்பினர். அப்போதே CGI அனிமேஷன் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது குறித்தும், இதுபோன்று பரவி வரும் செய்திகளையும் ஆய்வுசெய்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: CEAT Tyres விளம்பர வீடியோவை 'மும்பையில் வித்தியாசமான காட்சி' என செய்தி வெளியிட்ட தினகரன்!
முடிவு:
நம் தேடலில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு, ஆளுயர தங்க சிலை திறக்கப்பட்டுள்ளது என்று கூறி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.