YouTurn

நடிகர் விஜய்க்கு துணை முதல்வர் பதவி தருவதாகச் சீமான் கூறினார் எனப் பரவும் போலி செய்தி!

நடிகர் விஜய்க்கு துணை முதல்வர் பதவி தருவதாகச் சீமான் கூறினார் எனப் பரவும் போலி செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விஜயை கூட்டணிக்கு அழைக்கும் சீமான்! விஜய் விரும்பினால் 2026 ல் சேர்ந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க நாதக தயாராக உள்ளது நான் முதல்வர்; தம்பி விஜய் துணை முதல்வர்; புஸ்ஸிக்கு வேண்டுமானால் நிதித்துறை தருகிறோம்.

X link

விரிவான விளக்கம்

நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்’ என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். கட்சி பெயர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பிலேயே தங்களது கட்சி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் கட்சி தொடங்கியது பற்றி பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 



இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயை கூட்டணிக்கு அழைத்ததாக 'நியூஸ் 18 தமிழ்நாடு' பெயரில் நியூஸ் கார்டு ஒன்று திமுக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது. மேலும் அக்கூட்டணி வெற்றி பெற்றால் 'நான் (சீமான்) முதல்வர், விஜய் துணை முதல்வர், புஸ்ஸி ஆனந்துக்கு நிதித்துறை' எனச் சீமான் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உண்மை என்ன ?

நியூஸ்  18 தமிழ்நாடு பெயரில் பரவக் கூடிய நியூஸ் கார்டு குறித்து அவர்களது அதிகாரப் பூர்வ எக்ஸ் பக்கத்தில் தேடியதில், அப்படி எந்த கார்டும் இல்லை. விஜய் அரசியல் கட்சி தொடங்கியது தொடர்பாக 'பெயர் நன்றாக இருக்கிறது - சீமான்’ என்கிற தலைப்பில் மட்டுமே ஒரு நியூஸ் கார்டு உள்ளது. 



அந்த கார்டில், “தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் நன்றாக இருக்கிறது, வரவேற்கிறேன்; பெயரில் திராவிடம் என்று இல்லாததே பெரிய மாறுதல்தான்; அவருக்கான வாக்காளர்கள் அவருக்கு, எனக்கான வாக்காளர்கள் எனக்கு. நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நியூஸ்18க்கு பேட்டி” என்றுள்ளது. 

நேற்றைய தினம் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில் 'விஜய் 2026 தேர்தலில் போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதா’ என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது. 



அதற்குச் சீமான், “என்னைக் கேட்கிறீர்கள் நான் இந்த தேர்தலில் கூட்டணி இல்லை எனச் சொல்கிறேன். அதைத் தம்பிதான் முடிவு எடுக்க வேண்டும். அவர் என்ன நினைக்கிறார் என நாம் சொல்ல முடியாது. அவர் வருகிறார் என முன்னாடியே உங்களுக்குத் தெரியும். தம்பி வரும்போது வாங்க எனத் தட்டித்தான் கொடுக்க வேண்டும்.  ஏன் என்றால் இந்த களத்தில் கூடுதலாக ஒருவர் வந்து வேலை செய்யும்போது வலிமைதான். நான் தூத்துக்குடியில் 15 நாள் உதவுகிறேன். அவரும் உதவுகிறார். அது மற்றவர்களுக்கு முன்மாதிரி. சில நடிகர்கள் தம்பி உதயநிதி, அய்யா ஸ்டாலினிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். ஆனால், விஜய் களத்தில் வந்து உதவுகிறார் என்றால் நல்லது தானே. நூலகம் திறக்கிறார். புத்தகம் வாங்கி படியுங்கள் எனச் சொல்கிறார். அண்ணன் சொல்வதை விட ஒரு புகழ் பெற்ற நடிகர் சொல்லும்போது கூடுதலாகவும் சென்று சேரும். இதுயெல்லாம் வரவேற்க்கதக்கது தான்” என பதிலளித்துள்ளார். 



அவர் எந்த இடத்திலும் பரவக் கூடிய நியூஸ் கார்டில் இருப்பதுபோல் விஜயைக் கூட்டணிக்கும் அழைக்கவில்லை, வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவி விஜய்க்கு தருவதாகவும் கூறவில்லை. கூட்டணி குறித்த முடிவினை விஜய்தான் எடுக்க வேண்டும் என்று மட்டும்தான் பேசியுள்ளார்.

இவற்றில் இருந்து பரவக் கூடிய நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

மேலும் படிக்க : டெல்லியில் புஸ்ஸி ஆனந்த் உடன் இருப்பவர் பாஜக ஆதரவாளர் பிரகாஷ் எம் சாமி எனப் பரவும் பொய் !

இதைபோல், விஜயின் தமிழக வெற்றி கட்சியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்துடன் பாஜகவைச் சேர்ந்த பிரகாஷ் எம் சாமி உள்ளார் எனப் பரப்பப்பட்ட போலி செய்தி குறித்த உண்மை யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

முடிவு : 

நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அவரை கூட்டணிக்கு அழைத்து துணை முதல்வர் பதவி தருவதாகச் சீமான் கூறியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. சீமான் அப்படிப் பேசவும் இல்லை, நியூஸ் 18 தமிழ்நாடு கார்டில் எடிட் செய்துள்ளனர். 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க