யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் சோதனை செய்த ஏவுகணை தோல்வியில் முடிவடைந்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை தோல்வி. ஏன்டா பூனைக்கும், புலிக்கும் வித்யாசம் இல்லையா??? ஒரே நாளில் பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து இல்லாமல் போய்விடும்.
விரிவான விளக்கம்
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தளமான பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டஸ் பிரண்ட்’ பொறுப்பேற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் சோதனை செய்த ஏவுகணை தோல்வியில் முடிவடைந்ததாகக் கூறி 21 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்படுகிறது.
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை தோல்வி😂
#PahalgamTerroristAttack pic.twitter.com/iJbVUZZt3w
நம்ம திராவிடத்திடம் யோசனை கேட்டு இருக்க வேண்டாமா?
ஒரே நாளில் பாக்கிஸ்தான் Mapல இல்லாம போயிரும்✊🏻
#பாகிஸ்தான் ஏவுகணை சோதனை தோல்வி😂
ஏன்டா பூனைக்கும், புலிக்கும் வித்யாசம் இல்லையா???😹
ஒரே நாளில் பாக்கிஸ்தான் Mapல இல்லாம போயிரும்✊🏻 pic.twitter.com/f4nV2YPk51
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “Russian Space Web” இணையதளப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு கடந்த 2013-ல் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதில், “புரோட்டான் ராக்கெட் ஜூலை 2, 2013 அன்று மாஸ்கோ நேரப்படி காலை 06:38:21.585 மணிக்கு (ஜூலை 1, 10:38 pm EDT) விண்ணில் ஏவப்பட்டது. அந்த ராக்கெட் சுமார் 32.682 வினாடிகள் கழித்து விபத்துக்குள்ளானதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஜூலை 18, 2013 அன்று தெரிவித்துள்ளது“ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இது குறித்து, “Euronews“ யூடியூப் பக்கத்திலும் “ரஷ்யாவின் புரோட்டான்-எம் ராக்கெட் ஏவிய உடனே தோல்வியடைந்ததன் காரணமாக விபத்துக்குள்ளாகி வெடித்தது“ என்று குறிப்பிட்டு கடந்த 2013 ஜூலை 02 அன்று வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அது பரவி வரும் வீடியோவோடு கச்சிதமாகப் பொருந்துவதைக் காண முடிகிறது.
இதன் மூலம், பரவி வரும் வீடியோ, கடந்த 2013-ல் ரஷ்யாவைச் சேர்ந்த “Proton-M” ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகி வெடித்தபோது எடுக்கப்பட்டது என்பதையும், இந்த பழைய வீடியோவை பாகிஸ்தான் ஏவுகணை சோதனை முயற்சி என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதையும் அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் சோதனை செய்த ஏவுகணை தோல்வியில் முடிவடைந்ததாகக் கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. பரவி வரும் வீடியோவில் இருப்பது ரஷ்யாவைச் சேர்ந்த “Proton-M” ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.