யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மிலாது நபி பண்டிகையையொட்டி மகாராஷ்ட்ராவில் நடந்த பேரணியை, காங்கிரஸ் கட்சி ஹரியானா மாநில தேர்தலையொட்டி நடத்திய பிரச்சார பேரணியாக திரித்துப் பரப்புகிறார்கள்.
பரவிய செய்தி
பாலஸ்தீனம், பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளின் கொடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஹரியானாவில் காங்கிரஸ் தேர்தல் பேரணி இதுவாகும் பாரத் ஜோடோ. இந்தியாவை மத ரீதியாக பிரித்து சூறையாடும் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரம் கூட்டத்தினர் கையில் பாகிஸ்தான்,பாலஸ்தீனம் துருக்கி நாட்டு கொடி

விரிவான விளக்கம்
கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 5 ஆம் தேதி) ஹரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், இஸ்லாமிய அமைப்புகளின் கொடிகளுடன் நடைபெற்ற பேரணி ஒன்றின் காணொளியை பதிவிட்டு, இது ஹரியானா மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி நடத்திய பேரணி என்றும், அதில் கலந்துகொண்டவர்கள் பாகிஸ்தான், பாலஸ்தீனம், துருக்கி போன்ற நாடுகளின் கொடிகளை வைத்திருந்ததாகவும் தகவல் பரப்பப்பட்டது.
உண்மை என்ன?
பரப்பப்பட்ட காணொளியின் key frame-களைக் கொண்டு தேடுகையில், யூட்யூப் தளத்தில் ‘सरकार ki amad Eid miladunnabi’ என்று தலைப்பிடப்பட்டு அதே காணொளி பதிவிடப்பட்டிருந்தது. மற்றொரு யூட்யூப் தளத்தில் ‘🔥Latur se mumbai ashike rasul nikal chuke hai subhan Allah 🔥 Maharashtra reli🔥’ என்று தலைப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது. இதிலிருந்து இந்த காணொளி, லாத்தூர் என்னும் ஊரில் மிலாது நபி பண்டிகையையொட்டி நடந்தப்பட்ட பேரணியின் போது எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று ஊகிக்க முடிந்தது. இதனை உறுதி செய்ய இது பற்றிய அதிகாரப்பூர்மான செய்திகளை தேடுகையில், ’Latur News Official’ என்னும் யூட்யூப் தளத்தில் இந்தப் பேரணி லாத்தூர் பகுதியின் வேறொரு தெருவை கடந்து செல்லும் காணொளியை காண முடிந்தது.

இந்த காணொளியில் நாம் பார்ப்பது பரப்பப்பட்ட காணொளியில் இருக்கும் அதே பேரணிதான் என்பதை Google Map ன் உதவி கொண்டு உறுதி செய்ய முடிந்தது.
இந்த பேரணியின் போது பாகிஸ்தான், பாலஸ்தீனம், துருக்கி போன்ற நாட்டுக் கொடிகள் வைத்திருந்ததாக தகவல் பரப்பப்படுவதன் உண்மைத்தன்மையை சோதிக்க, பேரணியின் போது கொண்டுசெல்லப்பட்ட கொடிகளின் screenshot -களையும், அந்தந்த நாடுகளின் கொடிகளையும் ஒப்பிட்டு பார்த்தோம். ஆனால் அவை பாகிஸ்தான், துருக்கி நாட்டு கொடிகளுடன் ஒத்துப்போகவில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியை பாகிஸ்தான் கொடியாக பலர் குழப்பிக்கொள்கிறார்கள். இதுபற்றி யூடர்ன் தளத்தில் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டுள்ளோம். மேலும், சிவப்பு பின்புலத்தில் பிறையும் நட்சத்திரமும் இருப்பது துருக்கி கொடியென குழப்பிக்கொள்ளப்படுகிறது. ஆனால், பலாஸ்தீன கொடி கொண்டு செல்லப்பட்டது உண்மைதான்.
இதிலிருந்து, இந்தப் பேரணி மகாராஷ்ட்ரா மாநிலத்தின் லாத்தூர் என்னும் பகுதியில் மிலாது நபி பண்டிகையை ஒட்டி நடந்தப்பட்டது, ஹரியானவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரப் பேரணி அல்ல என்பதும், பேரணியின் போது பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாட்டின் கொடிகள் வைக்கப்படவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.
முடிவு:
ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தின் போது பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளின் கொடிகள் வைக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. மகாராஷ்ட்ரா மாநில லாத்தூரில் மிலாது நபி பண்டிகையையொட்டி நடத்தப்பட்ட பேரணி அது.