யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவக் கூடிய வீடியோவில் உள்ள முதியவரின் பெயர் சியாராம் பாபா. இவரது வயது 110. இவர் குகையிலிருந்து மீட்கப்பட்டதாகக் கூறும் தகவல் பொய்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பெங்களூர் அருகிலுள்ள குகை ஒன்றிலிருந்து 188 வயதுடைய முதியவர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோ குறித்துத் தேடியதில், அந்த முதியவர் பற்றி ‘Navbharat Times’ தளத்தில் கடந்த ஜூலை 2ம் தேதி செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. இந்தியில் இருந்த அச்செய்தியை மொழிப்பெயர்த்துப் படித்ததில், ’சியாராம் பாபா’ என்ற அந்த முதியவருக்கு 109 வயது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.

மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள பத்யன் (Bhatyan) என்ற ஆசிரமத்திலுள்ளார். அப்பகுதியில் உள்ள மக்கள் இவரது வயதை 109, 110 என்றும் இன்னும் சிலர் 130 என்றும் முன்னுக்குப் பின் முரணாகக் கூறுவதாகவும் அவரும் தனது வயது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘Argus Digital’ என்ற யூடியூப் பக்கத்திலும் இந்த முதியவர் பற்றிய செய்தி வீடியோவுடன் வெளியாகியுள்ளது. அதிலும் இவரது வயது 110 என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதியவரின் பல வீடியோக்கள் யூடியூபில் உள்ளது. அவர் தனது அன்றாட வேலைகளைத் தானே செய்து கொள்வதாகவும் சில வீடியோக்களைக் காண முடிகிறது.
ஆவணங்களின் அடிப்படையில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஜீன் கால்மென்ட் (Jeanne Calment 1875–1997) என்பவர் 122 வயது வரை வாழ்ந்ததாக கின்னஸ் உலக சாதனை தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்களிலிருந்து 188 வயது முதியவர் பெங்களூர் குகையிலிருந்து மீட்கப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மையல்ல என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
பெங்களூர் அருகிலுள்ள குகை ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர் எனப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. சியாராம் பாபா என அழைக்கப்படும் இவர் மத்தியப் பிரதேசத்தில் வாழ்கிறார். இவரது வயது 110 எனப் பல செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
