யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முதல்வரின் கிராமப்புறப் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (MGSMT) தமிழ்நாடு மாநில அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. அதற்கான நிதியை மாநில அரசு தான் வழங்குகிறது.
பரவிய செய்தி
ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தை, தமிழ்நாடு அரசு தன் பெயரில் விளம்பரப்படுத்தி வருகிறது. இதற்கான நிதியை ஒன்றிய அரசே வழங்குகிறது.
விரிவான விளக்கம்
கிராமப்புற சாலையின் ஓரத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் குறித்த அறிவிப்பு பலகை நடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை குறிப்பிட்டு ’இந்த கிராமப்புற சாலை திட்டம் மோடி தலைமையிலான ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது. இதற்கான நிதியை ஒன்றிய அரசே தான் வழங்குகிறது. ஆனால் இதனை தமிழ்நாடு அரசு தன் பெயரில் விளம்பரப்படுத்தி வருகிறது’ என்று இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
உண்மை என்ன?
முதல்வரின் கிராமப்புறப் சாலை மேம்பாட்டுத் திட்டம் குறித்த தகவல்களை இணையத்தில் தேடிய போது, ‘The Hindu’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

2024 மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், ’முதல்வரின் கிராமப்புறப் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (MGSMT) கீழ் 2025-25ஆம் நிதியாண்டில் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்காக (Improving) 1000 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2025 ஜூன் மாதம் ’DT NEXT’ செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியின் படி, முதல்வரின் கிராமப்புறப் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (MGSMT) கீழ் தமிழ்நாடு முழுவதும் 20,000 கி.மீ நீளத்திற்கு கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு 8000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், முதல்வரின் கிராமப்புறப் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (MGSMT) என்பது தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இயங்குவதாகும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், கிராமங்களை தேசிய நெடுஞ்சாலை அல்லது மாநில நெடுஞ்சாலை ஆகியவற்றுடன் இணைக்கும் சாலைகள்; கிராமங்களை பள்ளி கல்லூரிகள், மருத்துவமனைகள், சந்தை, பேருந்து நிலையம் ஆகியவற்றுடன் இணைக்கும் சாலைகள் ஆகியவற்றை அமைத்துக் கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, முதல்வரின் கிராமப்புறப் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (MGSMT) என்பது தமிழ்நாடு மாநில அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதும் அதற்கான நிதியை மாநில அரசு தான் வழங்குகிறது என்பதும் தெளிவாக தெரிகிறது.
முடிவு:
தமிழ்நாடு அரசின் சொந்த நிதியாரத்திலிருந்து செயல்படுத்தப்படும் முதல்வரின் கிராமப்புறப் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (MGSMT) ஒன்றிய அரசால் நிதியளித்து செயல்படுத்தப்படுவதாக தவறாக பரப்பப்படுகிறது.