யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
புதுச்சேரி கொக்குபார்கில் இருந்து தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை செல்லும் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக இருப்பதைக் கண்டித்து சமூக ஆர்வலர் சுந்தராஜன் புதுச்சேரியில் துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இதை தமிழ்நாடு என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
திறனற்ற திமுக அரசு பிரதான சாலையை சீரமைக்க வேண்டி நூதன போராட்டம்!
#திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு #திருட்டுதிமுக #ByeByeStalin

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் சாலையில் தேங்கியிருந்த நீரில் ஒருவர் துணி துவைத்து நூதன போராட்டம் நடத்தியதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது ”குண்டும் குழியுமான சாலையில் தேங்கிய மழை நீர் - துணி துவைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 19ஆம் தேதி Pondy Mirror என்ற புதுச்சேரியை சேர்ந்த ஊடகத்தின் முகநூல் பக்கத்தில் இந்த வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
இதை வைத்து keywords மூலம் வேறு ஏதேனும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்பதை தேடினோம். அப்போது “துணி துவைக்கும் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்” என்ற தலைப்பில் தினமலர் ஊடகத்தில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் புதுச்சேரி கொக்குபார்கில் இருந்து தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை செல்லும் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அதனை கண்டித்து, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அலுவலகம் அருகில் சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தரராஜன், சாலையில் குளம் போல நின்ற மழைநீரில், தனது ஆடைகளை கழற்றி துவைத்து போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் கலாட்டா ஊடகத்தில், புதுச்சேரியில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் துணி துவைத்து காய வைத்த சமூக ஆர்வலர். குண்டும் குழியுமாக உள்ள சாலையை உடனடியாக சரி செய்ய நூதன போராட்டம் என்று இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதை மேலும் உறுதி செய்ய, பரவி வரும் வீடியோவில் அரசினர் மத்திய அமைச்சகம் என்று ஒரு அரசு அலுவலகத்தின் கட்டடம் தெரிந்தது. இதையடுத்து கூகுள் மேப்பில், புதுச்சேரி அரசினர் மத்திய அச்சகம் என்று டைப் செய்து தேடினோம். அப்போது புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி என்று இடத்தில் அந்த அலுவலகம் இருப்பது தெரியவந்தது. அதன் ஸ்ட்ரீட் வியூ பார்த்தபோது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இடமும், கூகுள் மேப்பில் பார்த்த இடமும் ஒன்றாக இருந்ததைக் காணமுடிந்தது.

முடிவு:
நம் தேடலில், இது புதுச்சேரி கொக்குபார்கில் இருந்து தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை செல்லும் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக இருப்பதைக் கண்டித்து சமூக ஆர்வலர் சுந்தராஜன் துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்தது. இதை தமிழ்நாடு என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.