யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2024ஆம் ஆண்டிலே ’Saint Gobain’ தமிழ்நாட்டில் 3400 கோடி முதலீடு செய்வது குறித்து தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.
பரவிய செய்தி
தவெக ஆட்சி பொறுப்பேற்று கீர்த்தனா தொழிற்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். தற்போது Saint Gobain நிறுவனம் தமிழ்நாட்டில் 3400 கோடிகள் முதலீடு செய்யவுள்ளது.

விரிவான விளக்கம்
தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, ’Saint Gobain’ நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்ததாக தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இதனை மேற்கோள் காட்டி, தற்போது ‘Saint Gobain’ நிறுவனம் தமிழ்நாட்டில் 3400 கோடிகள் முதலீடு செய்யவுள்ளது என்ற தொனியில் ’Chennai Updates’ என்ற சமூக வலைத்தளப் பக்கம் பதிவிட்டுள்ளது.
TN Industries Minister Keerthana's first interaction with an investor. 🇫🇷Saint Gobain has been calling TN its home for few decades now. They are investing 3,400+ Crs in TN including its largest plant globally...🙌 #InvestInTN #SaintGobain https://t.co/P02Rpo2JD0
உண்மை என்ன?
’Saint Gobain’ நிறுவனம் தமிழ்நாட்டில் செய்துள்ள முதலீடுகள் குறித்து இணையத்தில் தேடினோம். ‘AutoCar Professional’ என்ற தளத்தில் 2024 ஜனவரி மாதம் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

அதன்படி, ’Saint Gobain’ நிறுவனம் தமிழ்நாட்டில் 3400 கோடி வரை முதலீடு செய்வதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாக தெரியவருகிறது. இந்த 3400 கோடி முதலீடு செய்வதன் மூலம் தமிழ்நாட்டில் ’Saint Gobain’ நிறுவனத்தின் முதலீடு மொத்தமாக 8000 கோடியை எட்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து தேடியபோது, ’Saint Gobain’ வலைத்தளத்திலே இதுபற்றிய தகவலைக் காணமுடிகிறது. 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ’Saint Gobain’ நிறுவனம் தமிழ்நாட்டில் 3400 கோடி வரை முதலீடு செய்வதாக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Acoustic Ceiling, Ceramics போன்ற கட்டுமான பொருட்களின் உற்பத்தியை நோக்கி இந்த முதலீடுகள் இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது 2024ஆம் ஆண்டிலே ’Saint Gobain’ தமிழ்நாட்டில் 3400 கோடி முதலீடு செய்வது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பது தெரியவருகிறது.
முடிவு:
தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ’Saint Gobain’ நிறுவனம் தமிழ்நாட்டில் 3400 கோடிகள் முதலீடு செய்யவுள்ளது என்ற தொனியில் ’Chennai Updates’ தவறாக பரப்பிவருகிறது.