யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தேர்தல் விதிமுறைகளின் படி வேட்புமனு பூர்த்தி செய்யப்படாத காரணத்திற்காக தான் தவெகவின் வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளரின் வேட்புமனுகள் தள்ளுபடி செய்யப்பட்டது.
பரவிய செய்தி
எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்.

விரிவான விளக்கம்
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், தவெக கட்சியின் வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் ஆகிய இருவரின் வேட்புமனுக்களும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால், எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் யாரும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார் என்பவருக்கு தவெக ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளதாக கடந்த 19ஆம் தேதி தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டார். அதில், ’எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் தான் சுயட்சை வேட்பாளரை ஆதரிப்பதாகவும்’ குறிப்பிட்டிருக்கிறார் விஜய்.
என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய… pic.twitter.com/Y9PrumJfmd
உண்மை என்ன?
சேலம் எடப்பாடி தொகுதியில் தவெகவின் வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்த செய்திகளைத் தேடினோம். இது குறித்து ’இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த ஒரு செய்தியைக் காணமுடிந்தது.

அதன்படி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளர் அருண்குமார் மற்றும் மாற்று வேட்பாளராக அவரது மனைவி நித்யா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளரின் வேட்புமனுவை அதே தொகுதியைச் சேர்ந்த 10 நபர்கள் முன்மொழிய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால், தவெக வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனுவை 8 பேர் மட்டுமே முன்மொழிந்திருந்தனர். இதன் காரணமாக அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்யப்பட்டதாக அதிகாரி உத்தரவிட்டார்.
இதே போல், வேட்புமனுவை 8 பேர் மட்டுமே முன்மொழிந்திருந்த காரணத்திற்காக தவெக மாற்று வேட்பாளர் நித்யாவின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து, தேர்தல் விதிமுறைகளின் படி வேட்புமனு பூர்த்தி செய்யப்படாத காரணத்திற்காக தான் அவர்களின் வேட்புமனுகள் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
இதனை மறைத்து, எடப்பாடி தொகுதியில் தவெக கட்சியின் சின்னம் முடக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.