யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தவெக தொண்டர்கள் சாலையைப் பார்க்காமல் விஜயின் வாகனத்தைப் பார்த்துக் கொண்டே வருவதால் விபத்து நடக்கிறது. செய்தியாளரின் கேமரா முன்னோக்கி நகர்வதால், கேமரா கோணத்தின் காரணமாக போலீஸ் வாகனம் பின்னோக்கி செல்வதைப் போன்ற தோற்றமளிக்கிறது. ஆனால் உண்மையில் போலீஸ் வாகனம் நின்று கொண்டுதான் இருக்கிறது.
பரவிய செய்தி
So a police jeep caused this accident.
Look at the speed he is reversing on a national highway No basic common sense with a large number of people travelling on a straight road. Why was the police jeep reversing unnecessarily? It feels like a deliberately caused incident to demean Vijay's reputation

விரிவான விளக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசார கூட்டம் நடைபெற்றது. அப்போது விஜய்யை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.
இந்நிலையில் விஜய்யை பார்ப்பதற்காக வந்த தொண்டர்கள் சாலை விபத்தில் சிக்கிய வீடியோவை பதிவிட்டு, போலீஸ் வாகனம் பின்னோக்கி இயக்கப்பட்டதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறி தவெகவை சேர்ந்தவர்கள் பரப்பி வருகின்றனர்.
இவ்வளவு பேர்கள் வரும் சாலையில் வண்டியை இவ்வளவு வேகமாக பின்நோக்கி நகர்த்தி விபத்தை ஏற்படுத்திய காவல்துறை . 😥 pic.twitter.com/jexJudsshr

உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் புதிய தலைமுறையின் லோகோ இருந்ததை பார்க்கமுடிந்தது. அதன் படி, புதிய தலைமுறை ஊடகத்தில் இது குறித்தான முழு வீடியோவையும் தேடிப் பார்த்தோம். அப்போது ”தஞ்சையில் தவெக மக்கள் சந்திப்பு” என்ற தலைப்பில் விஜய் வருகை குறித்த முழு வீடியோவையும் செய்தியாக வெளியிட்டிருந்தனர்.
அந்த வீடியோவில் பரவி வரும் காட்சிகள் குறித்து தேடியப் போது, 35:30 நிமிடத்தில் அந்த காட்சி இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அந்த வீடியோவை கூர்ந்து பார்க்கையில், பேருந்து நிறுத்தத்தையொட்டி போடப்பட்டிருக்கிற இணைப்பு சாலையில் ஓரமாக போலிஸ் வாகனம் நின்று கொண்டிருக்கிறதை பார்க்கமுடிகிறது. மேலும் அந்த வீடியோவை pause செய்து பார்க்கும் போது, போலீஸ் வாகனத்திற்கு சில அடிகள் முன்பாக இணைப்பு சாலை முடிவடைந்திருப்பதையும் பார்க்கமுடிகிறது.

இதையடுத்து அந்த தொண்டர்கள் வரும் காட்சியை கூர்ந்து பார்க்கையில், விபத்து ஏற்பட்ட இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், விஜய்யின் வாகனத்தை மட்டும் பார்த்துக்கொண்டு வாகனத்தை இயக்கியது தெளிவாக தெரிந்தது. அப்போது திடீரென சாலையில் ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது மோதுகின்றனர். அதில் இருவரும் நிலைகுலைந்து கீழே விழுகின்றனர்.
மேலும் அந்த வீடியோவில், செய்தியாளர் ஒருவர் ”விழுந்துட்டாங்க” என்று கூறிவிட்டு, அதை படமாக்கும் காட்சிகளையும் பார்க்கமுடிந்தது. அப்போது செய்தியாளரின் கேமரா முன்னோக்கி நகர்வதால், கேமரா கோணத்தின் காரணமாக போலீஸ் வாகனம் பின்னோக்கி செல்வதைப் போன்ற தோற்றமளிக்கிறது. ஆனால் உண்மையில் போலீஸ் வாகனம் நின்று கொண்டுதான் இருக்கிறது.
முடிவு:
எனவே, சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது தவெக தொண்டர்கள் மோதி கீழே விழும் காட்சி தெளிவாக பதிவாகியிருந்தது. இதை காவல்துறை வாகனம் பின்னோக்கி வந்ததால் தான் விபத்து நடந்தது என்று பொய்யான தகவலை தவெகவினர் பரப்பி வருகின்றனர்.