யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2005 முதலே தமிழில் இதன் மொத்த தொகுப்பும் உண்டு. பின்னர் 2023-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு தனது பட்ஜெட்டில், NCBH ஏற்கனவே செய்துவரும் மொழிபெயர்ப்பை எளிமையாக்குவதை நோக்கமாகக் கொண்டு மொழிபெயர்ப்புத் திட்டத்திற்காக ₹5 கோடியை அறிவித்தது. பின்னர் 2025 இல் திமுக அரசு 100 தொகுதிகளாக மேம்படுத்தி பகுத்து வெளியிடத் திட்டமிட்டது.
பரவிய செய்தி
75 ஆண்டுகளாக 'Ambedkar writings and speeches’ நூலை தமிழாக்கம் செய்யாத தமிழ்நாடு அரசு, விஜய் பேசிய பிறகுதான் தமிழாக்கம் செய்யத் தொடங்கியது - வழக்கறிஞர் சத்யகுமார், தவெக

விரிவான விளக்கம்
அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 06, 2024 அன்று, ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து விசிக தலைவர் திருமாவளவனுக்கு எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. அவரின் மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும் என்று அப்போது விஜய் பேசியது பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில் 75 ஆண்டுகளாக 'Ambedkar writings and speeches’ நூலை தமிழாக்கம் செய்யாத தமிழ்நாடு அரசு, விஜய் பேசிய பிறகுதான் தமிழாக்கம் செய்யத் தொடங்கியது என்று தவெக திருத்தணி வேட்பாளர் சத்யகுமார் தெரிவித்துள்ளார்.
உண்மை என்ன?
சத்யகுமார் தெரிவித்த இந்த கருத்து குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது மார்ச் 17, 2015 அன்று Press Information Bureau வெளியிட்ட அறிக்கை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் ஆங்கில மொழி எழுத்துக்களும் உரைகளும், 18 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு, மகாராஷ்டிர அரசால் 'பாபாசாகேப் அம்பேத்கரின் தொகுப்பு நூல்கள்' என வெளியிடப்பட்டுள்ளன என்றும், மகாராஷ்டிர அரசால் தொகுக்கப்பட்ட மொத்தம் 18 ஆங்கிலத் தொகுதிகள், இந்தி, மலையாளம், தமிழ், ஒடியா போன்ற பல்வேறு மொழியிலும் 40 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிய போது, The Hindu ஊடகத்தில் ஜனவரி 23, 2025 அன்று வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் NCBK நிறுவனம் டெல்லியில் இயங்கி வந்த அம்பேத்கர் பவுண்டேசன் அறக்கட்டளை உதவியுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட அறிஞர்களின் உதவியுடன் 1993 ஆம் ஆண்டு இதன் மொழிபெயர்ப்பு பணியை தொடங்கியது. பல ஆண்டுகள் உழைப்புக்குப்பின் (1993-2005) “அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும்” எனும் பெருந்தலைப்பில் வெளியிட்டது. இப்படைப்புகளை மொத்தம் 100 தொகுதிகளாக விரிவுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து 2023-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு தனது பட்ஜெட்டில், NCBH ஏற்கனவே செய்துவரும் மொழிபெயர்ப்பை எளிமையாக்குவதை நோக்கமாகக் கொண்டு மொழிபெயர்ப்புத் திட்டத்திற்காக ₹5 கோடியை அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 13, 2025 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அண்ணல் அம்பேத்கரின் தமிழாக்கங்கள் 17 தொகுதிகளை வெளியிட்டார் என்பதை தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட செய்தி மூலம் அறிய முடிந்தது.
இந்த தொகுப்புகள் இணையதளத்தில் உள்ளதா என்பதை பார்த்தோம். அப்போது தமிழ்நாடு அரசின் “தமிழ் மின் நூலகம்” இணையதளப் பக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டே பதிவேற்றம் செய்யப்பட்டு மக்கள் எளிய முறையில் அணுக வழிவகை செய்யப்பட்டுள்ளதை அறியமுடிந்தது.

முடிவு:
எனவே, 75 ஆண்டுகளாக 'Ambedkar writings and speeches’ நூலை தமிழாக்கம் செய்யாத தமிழ்நாடு அரசு, விஜய் பேசிய பிறகுதான் (2024) தமிழாக்கம் செய்யத் தொடங்கியது எனப் பரப்பபடும் செய்திகள் தவறானவை. 1993ஆம் ஆண்டு முதலே “அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும்” என்ற தலைப்பில் இதன் மொழிபெயர்ப்பு பணியை தொடங்கியது என்பதை அறியமுடிந்தது.