யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது குறித்து எந்தவொரு செய்தியும் எங்கும் வெளியிடப்படவில்லை. சமீபத்தில் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் கார்த்திகா ரமேஷ் ஆகிய இருவருக்குமே ஊக்கத்தொகையாக தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
பரவிய செய்தி
விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் கபடிப்போட்டிகளில் வெற்றி பெற்றால் பத்தாயிரம் ரூபாய் பரிசு, ஆனால் பெண்கள் வெற்றி பெற்றால் 5000 ரூபாய் பரிசு என்று உள்ளது - ராஜ்மோகன், தவெக

விரிவான விளக்கம்
விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் கபடிப்போட்டிகளில் வெற்றி பெற்றால் பத்தாயிரம் ரூபாய் பரிசு, ஆனால் பெண்கள் வெற்றி பெற்றால் 5000 ரூபாய் பரிசு என்று உள்ளதாக தவெகவைச் சேர்ந்த ராஜ்மோகன் செய்தி ஒன்றை பரப்பி வருகிறார்.
உண்மை என்ன?
முதலில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இது போன்று ஏதேனும் தகவல் உள்ளதா என்பதை தேடினோம். அப்போது போட்டி சார்ந்த செயல்பாட்டிற்கான உயரிய பண ஊக்கத்தொகை பட்டியலில், ராஜ்மோகன் கூறிய எந்த விதமான செய்தியும் அதில் இடம்பெறவில்லை.

அதே போல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெறும் அனைத்து ஆண், பெண் விளையாட்டு வீரர்களுக்குமான பொருளாதார செலவையும் தமிழக அரசே கவனித்துக் கொள்கிறது என்ற கூடுதல் தகவலையும் அதில் பார்க்கமுடிந்தது.
இதையடுத்து ராஜ்மோகன் கூறியது தொடர்பாக, ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது ”ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர்கள்: தலா ரூ.25 லட்சம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!” என்ற தலைப்பில் இந்து தமிழ் ஊடகத்தில் 26 அக்டோபர், 2025 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் கார்த்திகா ரமேஷ் ஆகிய இருவருக்குமே ஊக்கத்தொகையாக தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் கபடிப்போட்டிகளில் வெற்றி பெற்றால் பத்தாயிரம் ரூபாய் பரிசு, ஆனால் பெண்கள் வெற்றி பெற்றால் 5000 ரூபாய் பரிசு என்று உள்ளதாக தவெகவைச் சேர்ந்த ராஜ்மோகன் பரப்பும் செய்திகள் தவறானவை.