யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘நான் 1989-ல் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஆனேன்’ என்றும் ‘நான் 14 வயதில் அரசியலுக்கு வந்தேன்’ என்றும் முதல்வர் ஸ்டாலின் சரியாகவே கூறியிருக்கிறார்.
பரவிய செய்தி
நீங்கள் எப்போது முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டீர்கள்?
ஸ்டாலின்: 1989 (உண்மையில் 1984).
’நீங்கள் எத்தனை ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கிறீர்கள்?
ஸ்டாலின்: 14 ஆண்டுகள்.

விரிவான விளக்கம்
இந்திய டுடே பத்திரிகை சார்பில் ’Round Table Tamil Nadu’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் அங்கே தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்த நிகழ்ச்சியின் சிறிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘நீங்கள் எப்போது முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டீர்கள்?’ என்ற கேள்விக்கு 1989 என்று ஸ்டாலின் தவறாக பதில் கூறியதாகவும், ’நீங்கள் எத்தனை ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கிறீர்கள்?’ என்ற மற்றொரு கேள்விக்கு, ‘14 ஆண்டுகள்’ என்று மீண்டும் தவறாக பதில் கூறியதாகவும் தவெக கட்சியைச் சேர்ந்த ‘போக்கிரி விக்டர்’ என்பவர் பரப்பி வருகிறார்.

உண்மை என்ன?
‘இந்திய டுடே’ நடத்திய நிகழ்ச்சியில் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்கும் காணொளியை கவனித்தோம்.
அதில், ‘நீங்கள் எப்போது முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘நான் 1989-ல் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஆனேன்’ என்று ஸ்டாலின் கூறுகிறார். இது குறித்த தகவல்களை தேடியபோது, 1984ஆம் ஆண்டில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வியடைந்தார் என்பதையும்; பின்னர் மீண்டும் அதே தொகுதியில் நின்று 1989-ல் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார் என்பதையும் அறிகிறோம். அந்த வகையில் ஸ்டாலின் சொன்ன பதில் சரியானது தான்.

மேலும், ‘எத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு ’நான் 14 வயதில் அரசியலுக்கு வந்தேன்’ என்று கூறுகிறார் ஸ்டாலின். 1953ஆம் ஆண்டில் பிறந்த ஸ்டாலின், 1967-68ஆம் ஆண்டில் தனது நண்பர்களைக் கொண்டு ’கோபாலபுரம் இளைஞர் திமுக’ என்ற அமைப்பை ஒரு முடி திருத்தும் கடையில் நடத்தி வந்திருக்கிறார். இதனை குறிப்பிட்டு தான் ‘14 வயதில் அரசியலுக்கு வந்தேன்’ என்று சொல்கிறார்.

இவ்வாறு ஸ்டாலின் கூறிய பதில்களை திரித்து, ’1989-ல் முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டேன் என்றும் நான் 14 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்’ என்றும் ஸ்டாலின் சொன்னதாக ‘போக்கிரி விக்டர்’ தவறாக பரப்பிவருகிறார்.
முடிவு:
‘நான் 1989-ல் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஆனேன்’ என்றும் ‘நான் 14 வயதில் அரசியலுக்கு வந்தேன்’ என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியதை திரித்து, தவெகவைச் சேர்ந்த ‘போக்கிரி விக்டர்’ தவறாக பரப்பி வருகிறார்.