யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த ஏப்ரல் மாதம் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தவெக சார்பில் மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை அமைந்தகரை பகுதியில் அனுமதியின்றி தவெக கட்சியினர் போராட்டம் நடத்தியதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
சென்னை மாநகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு - செய்தி
நீதிமன்றத்தின் தீர்ப்பை கேட்டதை
அடுத்து போரட்ட களத்தில் இருந்த
தவெகவினர் ஓட்டம்..

விரிவான விளக்கம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 2 வாரமாக தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகைக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடப்பதாக கூறிய நீதிமன்றம், தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த த.வெ.க-வினர் தப்பி ஓடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த வீடியோ கூகுல் லென்ஸ் மூலம் தேடினோம். அப்போது தூய துறவி என்ற எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் வீடியோ, ஏப்ரல் 4, 2025 அன்று பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் காவலர்களை பார்த்து த.வெ.கவினர் தப்பி ஓடினர் என்றும், ரசிகர் மன்ற மனநிலையில் இருந்து மாறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
காவலர்களை பார்த்ததும் தெறிஞ்சு ஓடுறானுங்க தவெக தற்குறிஸ் 😂
இன்னும் ரசிகர் மன்ற மன நிலையிலயே சுத்திட்டு இருக்கானுங்க. 🥱 pic.twitter.com/7gUDx9z8OJ
இதை வைத்து மேலும் ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என தேடி பார்த்தோம். நக்கீரன் ஊடகப்பக்கத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி, “'கைது' என்றதும் தெறித்து ஓடிய தவெகவினர்” என்ற தலைப்பில் பரவி வரும் வீடியோவுடன் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தவெக சார்பில் மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை அமைந்தகரை பகுதியில் அனுமதியின்றி தவெக கட்சியினர் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. அங்கு சென்ற போலீசார் கைது செய்ய முயன்ற நிலையில் தவெக-வினர் குறுகிய தெருவில் தெறித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல், NewsTamil 24X7 ஊடகத்திலும் ”கைது என்றதும் தெறித்து ஓடிய தவெகவினர் | TVK | TVK Protest” என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து சென்னை அமைந்தகரையில் தவெக போராட்டம் நடத்தியதாகவும், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் தவெக தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்ததாகவும், இதில் சிலர் தொண்டர்கள் ஓட்டம் பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முடிவு:
நம் தேடலில், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தவெக சார்பில் சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடத்திய போது எடுக்கப்பட்டதாகும். இதை தற்போது நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் போராட்டத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.