யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு முறை பத்திரிகையாளர் சந்திப்புகளில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூட கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் பேசியது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
”கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு கூட நடத்தவில்லை” - தவெக நிர்வாகி அருண்ராஜ்.

விரிவான விளக்கம்
தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், டிசம்பர் 17 அன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது கட்சியின் தலைவர் இன்னும் செய்தியாளர்களை சந்திக்காததற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதல் அளித்த அருண்ராஜ், கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு கூட நடத்தவில்லை என்று தெரிவித்தார்.
உண்மை என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது வரை செய்தியாளர்களை சந்திக்கவில்லையா என்பதை தேடினோம். அப்போது News18 Tamil Nadu ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு" என்ற தலைப்பில் டிசம்பர் 10, 2022 அன்று முதலமைச்சரின் முழு செய்தியாளர் சந்திப்பு வீடியோ வெளியாகியிருந்தது. அதில் பேசிய அவர், மாண்டஸ் புயலால் பாதிக்கும் மாவட்டங்களை அறிந்து, அந்த அந்த மாவட்ட ஆட்சியரிடம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி பேசியுள்ளதாக தெரிவித்தார்.
அதே போல் 2023, 2024, 2025 என்று கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு முறை பத்திரிகையாளர் சந்திப்புகளில் பேசியுள்ளார்.
கடந்த நவம்பர் 28,2025 அன்று கூட "முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பிரஸ்மீட்" என்ற தலைப்பில் தந்தி டிவி ஊடகத்தில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்தித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
முடிவு:
நம் தேடலில், கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு முறை பத்திரிகையாளr சந்திப்புகளில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதை தெரிந்து கொள்ளாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு கூட நடத்தவில்லை என்று பொய்யான தகவலை தவெக நிர்வாகி அருண்ராஜ் பரப்புகிறார்.