யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணும் கொலையாளியும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் தான். இக்கொலையில் மதக் காரணம் எதும் இல்லை.
பரவிய செய்தி
ஹிந்து பெண்கள் முஸ்லிம்களை ஓடிபோய் கல்யாணம் கட்டிக்கிட்டா கடைசியில் வாழ்க்கை suit கேஸ் தான்...முடியும்

விரிவான விளக்கம்
பெண்ணின் இறந்த உடல் சூட்கேஸில் இருக்கும் வீடியோவை பதிவிட்டு, இந்து மதப் பெண் முஸ்லிம் இளைஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
ஹிந்து பெண்கள்
— 🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 (@VCankam) July 28, 2024
முஸ்லிம்களை ஓடிபோய் கல்யாணம் கட்டிக்கிட்டா
கடைசியில் வாழ்க்கை
suit கேஸ் தான்...முடியும் ☠️☠️☠️#LoveJihad ☠️☠️☠️ pic.twitter.com/tsrhh7zDiV
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடினோம். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வேறொரு வீடியோ ‘Live Gore’ என்ற தளத்தில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதிவிடப்பட்டுள்ளது. அதில் இச்சம்பவம் ஜவாலாபூர், ஹரித்வாரில் (உத்தரகாண்ட்) நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கொண்டு இதுதொடர்பாகத் தேடியதில், ‘Etv bharat’, ‘News 18’ தளங்களிலும் 2022ஆம் ஆண்டு மார்ச் 25 மற்றும் 26 தேதிகளில் செய்தி வெளியாகியிருப்பதைக் காணமுடிந்தது. குல்ஜெப் (Guljeb) என்ற முஸ்லிம் இளைஞன் ரம்ஷா (Ramsha) என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

பெண்ணின் வீட்டார் காதலை ஏற்காத நிலையில், காதலியும் அவர்கள் வீட்டில் சொல்வதைக் கேட்டு தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்ததாக குல்ஜெப் காவல்துறையிடம் கூறியுள்ளார்.
முன்னதாக ஹோட்டலில் அறை எடுக்கும்போது பெண்ணின் பெயர் காஜல் எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், காவல்துறை விசாரணையில் அப்பெண்ணின் உண்மையான பெயர் ரம்ஷா என்றும் அவர் மங்களூரை சேர்ந்தவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தூரத்துச் சொந்தக்காரர்களான இவர்கள் சுமார் 8 வருடம் காதலித்து வந்ததாக ‘Jagran’ தளத்தில் இதுதொடர்பாக வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றிலிருந்து கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் கொலை செய்தவர் இருவரும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகிறது. இக்கொலையில் எந்தவித மதக் காரணங்களோ காதலித்து பெண்ணை கொலை செய்யும் வஞ்சகமோ இல்லை.
முஸ்லிம் இளைஞர்கள் இந்து மதப் பெண்களைக் காதலிப்பதாகக் கூறி மதம் மாற்றுவதாகவும் கொலை செய்வதாகவும் பல பொய்யான செய்திகள் இதற்கு முன்னர் ’லவ் ஜிகாத்’ என்ற பெயரில் வலதுசாரிகளால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட பொய் செய்திதான் இதுவும்.
மேலும் படிக்க: இந்து மனைவியை முஸ்லிம் கணவர் அடித்ததாகப் பரவும் வதந்தி!
முடிவு:
இந்து பெண்ணை முஸ்லிம் இளைஞர் காதலித்து கொலை செய்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. பரவக்கூடிய வீடியோவில் கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் கொலையாளி இருவரும் முஸ்லிம்தான். இக்கொலைக்கு மதம் ஒரு காரணம் அல்ல.