யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது 0 ஆகியுள்ளது என்றே அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.அதே போல் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 1 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடையவர்கள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். சிலர் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக உள்ளனர் என்றே முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார்.
பரவிய செய்தி
தமிழ்நாட்டில் பூஜ்ஜியம் போதைப்பொருள் என்று அமைச்சர் சொன்ன, மறுநாள் முதலமைச்சர் ஒரு லட்சம் போதை மாத்திரை பறிமுதல் என்று பேசுகிறார் - திரிசக்தி சுந்தரராமன்

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் பூஜ்ஜியம் போதைப்பொருள் என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்ததாகவும், மறுநாளே முதலமைச்சர் ஒரு லட்சம் போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் திரிசக்தி குழுமத்தின் நிறுவனர் சுந்தரராமன் ஆதன் தமிழ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
உண்மை என்ன?
முதலில் அமைச்சர் மா.சுப்ரமணியம் தமிழ்நாட்டில் பூஜ்ஜியம் போதைப்பொருள் என்று கூறினாரா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது கலைஞர் ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் டிசம்பர் 30, 2025 அன்று ஒரு பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அதில் தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது ' 0 ' ஆகியுள்ளது என்றே அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியம் அளித்த பேட்டியையும் News Tamil 24X7 ஊடகத்தில் பார்க்கமுடிந்தது. அதில் அவர் தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது தான் ' 0 ' ஆகியுள்ளது என்பதை தொடர்ச்சியாக கூறி வருகிறேன், ஆனால் தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து முதலமைச்சர் பேசியது குறித்து தேடினோம். அப்போது தினத்தந்தி ஊடகத்தில் ”போதைப்பொருளை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு” என்ற தலைப்பில் ஜனவரி 02,2026 அன்று செய்தி வெளியாகியிருந்தது. திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 1 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடையவர்கள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். சிலர் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக உள்ளனர் என்றே கூறியிருந்தார்.

இதிலிருந்து அமைச்சர் கஞ்சா பயிரிடுவது குறித்தும், முதலமைச்சர் போதை மாத்திரைகள் குறித்தும் பேசியிருந்ததை திரிசக்தி சுந்தரராமன் ஒன்றிணைத்து பரப்பியது தெரியவந்தது.
இதையடுத்து இந்தியாவில் போதைப்பொருட்கள் புழக்கம் இருப்பது பற்றி தேடினோம். இந்திய அரசு மாநிலவாரியான தரவுகளைக் கொண்டு பார்க்கும் போது, 2024ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக போதைப்பொருட்கள் காரணமாக தமிழ்நாட்டில் 481 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களான மகாராஷ்ட்ராவில் 14,553 வழக்குகளும், உத்தர பிரதேசத்தில் 6,204 வழக்குகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முடிவு:
எனவே, தமிழ்நாட்டில் பூஜ்ஜியம் போதைப்பொருள் என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்ததாக பாஜகவை சேர்ந்த திரிசக்தி சுந்தரராமன் கூறுவது தவறான தகவலாகும்.