யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2012ல் வினாத்தாள் கசிவு காரணமாக ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட TNPSC தேர்வு ரத்து செய்யப்பட்ட வரலாறு தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது
பரவிய செய்தி
’தமிழ்நாட்டில் இதுவரை TNPSC தேர்வு தள்ளிவைக்கப்பட்ட வரலாறே இல்ல' - எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக பொதுச் செயலாளர்.
விரிவான விளக்கம்
2026 பிப்ரவரி 8ஆம் தேதி நடக்கவிருந்த TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகள் தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்வதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, ’திமுக ஆட்சியில் சமீபத்தில் TNPSC தேர்வில் நடந்த குளறுபடிகள் காரணமாக தேர்வை தள்ளி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை TNPSC தேர்வு தள்ளிவைக்கப்பட்ட வரலாறே இல்ல. TNPSC தேர்வை முறையாக நடத்துவதற்கு கூட திறனில்லாத அரசாங்கம் தான் திமுக அரசாங்கம்’ என்று பேசினார்.
உண்மை என்ன?
தமிழ்நாட்டில் இதுவரை எப்போதேனும் TNPSC தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறதா என்று இணையத்தில் தேடினோம். ‘THE NEW INDIAN EXPRESS’ செய்தித்தளத்தில் 2012 ஆகஸ்ட் மாதம் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.
அதில், அந்தாண்டு நடந்த TNPSC குரூப் 2 தேர்வில் ஈரோடு தர்மபுரி ஆகிய பகுதிகளில் வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், நடந்த முடிந்த அந்த தேர்வை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்தது.

அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தான் ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதிமுக ஆட்சியில் தேர்வில் நடந்த மோசடி காரணமாக, நடத்தி முடிக்கப்பட்ட TNPSC தேர்வு செல்லாது என்று ரத்து செய்யப்பட்ட வரலாறு இருக்கையில், TNPSC தேர்வு தள்ளிவைக்கப்பட்ட வரலாறே இல்லை என்று தவறான தகவலை பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
முடிவு:
2012ல் வினாத்தாள் கசிவு காரணமாக ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட TNPSC தேர்வு ரத்து செய்யப்பட்ட வரலாறு தமிழ்நாட்டில் இருக்கிறது. இதனை மறைத்து TNPSC தேர்வு தள்ளிவைக்கப்பட்ட வரலாறே இல்லை என்று தவறான தகவலை எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார்.