யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சென்னை சூளையில் செயல்பட்டு வரும் ஹஜ் இல்லம் ‘தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி’ என்ற தனியார் NGO அமைப்பால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது அரசு சார்ந்த அமைப்பு அல்ல. மாறாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நங்கநல்லூரில் அடிக்கல் நாட்டியுள்ள ஹஜ் இல்லம் தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நலத்துறை சார்பில் கட்டப்படுகிறது.
பரவிய செய்தி
யார் அப்பன் வீட்டு காசு
மக்கள் வரிப்பணத்தில் 39 கோடி ரூபாய் செலவில் சென்னை நங்கநல்லூரில் இரண்டாவது ஹஜ் இல்லம் எதற்கு ஏன்?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகே
பெரியமேட்டில் ஏற்கனவே ஹஜ் இல்லம் இருக்கும்போது இன்னொரு ஹஜ் இல்லம் நங்கநல்லூரில்?

விரிவான விளக்கம்
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 39 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள “தமிழ்நாடு ஹஜ் இல்லம்” கட்டுமானப் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகே பெரியமேட்டில் ஏற்கனவே ஹஜ் இல்லம் இருக்கும்போது இன்னொரு ஹஜ் இல்லம் எதற்கு என்று கூறி பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
முதலில் சென்னையில் உள்ள ஹஜ் இல்லம் குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது தமிழ்நாடு ஹஜ் சேவை சங்கத்தின் வரலாறு என்று ஹாஜி எச்.முகமது அப்சல் வெளியிட்ட அறிக்கை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் சென்னையில் ஹஜ் பயணிகள் அதிகளவில் வரத் தொடங்கியதால், சொந்த ஹஜ் இல்லத்தை அமைக்க முடிவு செய்து, பொருத்தமான இடத்தைத் தேடிக்கொண்டிருந்தது. 1992 ஆம் ஆண்டு சூளையில் உள்ள அனைகார் அப்துல் ஷுகூர் அறக்கட்டளையிடமிருந்து சுமார் 9.25 கிரவுண்டு நிலத்தை வாங்குவதன் மூலம் எங்கள் தேடல் முடிவுக்கு வந்தது. அதன்படி ஜூன் 25, 1993 அன்று, பைத்துல் ஹுஜ்ஜாஜுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதை யூடர்ன் தரப்பில் இருந்து ‘தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி’ நிறுவன ஊழியரிடம் பேசியும் உறுதிபடுத்தினோம்.

இதையடுத்து Fathima Muzaffer என்ற பேஸ்புக் பக்கத்தில், ஜூலை 30 அன்று பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அதில் தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி சார்பாக 2025 ஆம் ஆண்டு ஹஜ் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்தவர்களுக்கும், ஹஜ் வாலண்டியர்ஸ் மற்றும் உதவியாளர்களுக்கு நன்றி பாராட்டு விழா சென்னை ஹஜ் சர்வீஸ் ஸொசைட்டியில் 29/07/25 செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ. தலைமையில் அரசு சிறப்பு அதிகாரி சித்தீக் ஏற்பாட்டில் நடைபெற்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே போல் Chennai Online என்ற இணைதளப்பக்கத்தில், “Tamilnadu state Hajj Committee, Chennai invites Hajj applications” என்ற தலைப்பில் ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது. அதில் தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2016ல் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர்களிடமிருந்து ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, சென்னை சூளையில் செயல்பட்டு வரும் ஹஜ் இல்லம் ‘தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி’ என்ற தனியார் NGO அமைப்பால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதை மேலும் உறுதி செய்ய, யூடர்ன் தரப்பில் இருந்து தமிழ்நாடு அரசின் ஹஜ் கமிட்டி குழு ஊழியரிடம் பேசியும் உறுதிபடுத்தினோம்.
முடிவு:
நம் தேடலில் சென்னையில் ஏற்கனவே ஹஜ் இல்லம் செயல்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு புதிய ஹஜ் இல்லம் கட்டுவதாக பரவி வரும் செய்திகள் தவறானவை. சென்னை சூளையில் செயல்பட்டு வரும் ஹஜ் இல்லம் ‘தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி’ என்ற தனியார் NGO அமைப்பால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது அரசு சார்ந்த அமைப்பு அல்ல.