யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது குறித்த தர்மேந்திர பிரதானின் கூற்றுகள் முன்னுக்குப் பின் முரணானதாக உள்ளது.
பரவிய செய்தி
“கடந்தாண்டு மார்ச் 15ல் பிஎம்ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது" - ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
இதை செய்தி சரி பார்க்கும் “அறிஞர்கள் “ சரி பார்த்து உண்மையை விளக்குவார்களா.. ??

விரிவான விளக்கம்
ஒன்றிய அரசு அமல்படுத்த நினைக்கும் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, PM SHRI பள்ளிகள் தொடர்பாக தமிழ்நாட்டு அரசியல் சூழலில் கடந்த சில வாரங்களாக தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் 10ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”கடந்த ஆண்டு மார்ச் 15ல் பிஎம்ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிஎம்ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு முதலில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து - தற்போது யூடர்ன் அடிக்கிறது" என்று பேசியதாக தந்தி செய்தித் தொலைக்காட்சி ஒரு News Card-ஐ வெளியிட்டது. இந்த News Card சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
மார்ச் 10ஆம் தேதியன்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்ற அவையில் பேசிய காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் 11.08 மணியளவில் அவர், ‘PM SHRI பள்ளிகளைத் தமிழ்நாடு ஏற்றுக்கொண்டு MoU-ல் கையெழுத்திட இருந்தது’ எனக் கூறுகிறார். மீண்டும் 11.10 மணியளவில் அதாவது இரண்டு நிமிடங்கள் இடைவெளியில் ‘மார்ச், 15 (2024) அன்று அவர்கள் (தமிழ்நாடு) MoU-ல் கையெழுத்திட்டனர்’ என மாற்றிக் கூறியுள்ளார்.

‘தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது’ ‘கையெழுத்திட தயாராக இருந்தது’ என்ற தர்மேந்திர பிரதானின் கூற்றுகள் முன்னுக்குப் பின் முரணானதாக உள்ளது.
PM SHRI உட்பட சமக்ர சிக்ஷா திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக 2024 மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு உறுதியளித்தது என்று அண்ணாமலை சொல்லிய பொய்யான தகவல் குறித்து ‘YouTurn’ ல் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளோம்.
தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய கல்விக்கொள்கை பற்றிய சரத்தை நீக்கிவிட்டுத்தான் ஒன்றிய அரசுக்கு அனுப்பியதாகச் செய்திகளில் குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா, இது குறித்து ஒன்றிய அரசின் பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு எழுதியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில், ”PM SHRI பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கட்டமைப்பதில் தமிழ்நாடு ஆர்வமாக உள்ளது. இது சம்பந்தமாகப் பள்ளிக் கல்வி செயலாளர் தலைமையில் மாநில அளவிலான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைகளின்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடும்” என்ற முன்நிபந்தனை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனையடுத்து, தேசியக் கல்விக் கொள்கை சம்பந்தமான பகுதிகளை நீக்கிவிட்டு PM SHRI திட்டம் தொடர்பான வரைவுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Draft MoU) தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. அதில் தேசியக் கல்விக் கொள்கை சம்பந்தமான பகுதிகள் நீக்கப்பட்டிருப்பது பற்றி தர்மந்திர பிரதான் தனது கடிதத்தில் அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

மேற்கூறிய தகவல்களில் இருந்து, தமிழ்நாடு அரசு PM SHRI திட்டத்தை ஒப்புக்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக சொல்லப்படுவது தவறான தகவலாகும்.
முடிவு:
தர்மேந்திர பிரதான் மார்ச் 10ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பேசியது முன்னுக்குப் பின் முரணான கூற்றுகள் ஆகும். மேலும் தமிழ்நாடு அரசு PM SHRI திட்டத்தை ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டதாக சொல்லப்படுவது தவறான தகவல் ஆகும்.