யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது நடந்ததை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
ஈரோட்டில் செருப்படி வாங்கிய திமுக.. ஆட்சியில் இருந்து திருடுவதை தவிர வேறு எந்த வேலையும் செய்யாத திமுகவை விரட்டியடித்த பொதுமக்கள்..

விரிவான விளக்கம்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த EVKS.இளங்கோவன் காலமான நிலையில், அத்தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் செருப்படி வாங்கிய திமுக..
#ErodeEastByElection #DMKFailsTN pic.twitter.com/IVfvIPQjGl
ஆட்சியில் இருந்து திருடுவதை தவிர வேறு எந்த வேலையும் செய்யாத திமுகவை விரட்டியடித்த பொதுமக்கள்..
இந்த இடைத்தேர்தலுக்காகப் பிரச்சாரத்திற்குச் சென்ற திமுக-வினரை அங்குள்ள மக்கள் விரட்டியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவில் உள்ள வாகனத்தின் முன் பக்கத்தில் ‘கு.பிச்சாண்டி MLA’ என எழுதப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இதனைக் கொண்டு தேடியதில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் என்பதை அறிய முடிந்தது. பிரச்சார வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரிலும் திருவண்ணாமலை என்கிற பெயர் தெரிவதைக் காணலாம்.
மேற்கொண்டு பரவும் விடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு தேடியதில், இதே வீடியோ 2024, ஏப்ரல் மாதம் K.S.ராஜா என்ற பாஜக பொறுப்பாளர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
நாடாளுமன்றத் தேர்தல் 2024, ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அப்போது திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை என்பவர் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். அத்தேர்தல் பிரச்சாரத்தின் போது திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த சம்பவத்தை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர். குறிப்பிட்டு இச்சம்பவம் திருவண்ணாமலையில் எங்கு நடந்தது என்கிற விவரம் தெரியவில்லை. தகவல் கிடைக்கும் பட்சத்தில் கூடுதல் தகவலாக இக்கட்டுரையில் இணைப்போம்.
முடிவு:
இவ்வீடியோவில் உள்ள சம்பவம் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தது. இதனை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.