யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.
பரவிய செய்தி
கரப்பான் பூச்சிகளின் (CJP) போராட்டத்திற்கு வங்கதேச ஜமாஅத் - இ - இஸ்லாம் தனது அதிகாரப்பூர்வ ஆதரவை தெரிவித்துள்ளது. வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி அமைப்பு அந்நாட்டில் ஹிந்துக்களை அழித்தொழித் திடும் வேலையைச் செய்து வருகிறது.


விரிவான விளக்கம்
இந்தியாவில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும், நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் இளைஞர்கள் போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தை தொடக்கத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) ஒருங்கிணைத்து நடத்தினாலும் தற்போது பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு போராடி வருகிறார்கள். ஜூலை 20ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தை நோக்கி இளைஞர்கள் பேரணி செல்ல முயற்சித்த போது அவர்கள் மீது டெல்லி போலீஸார் மற்றும் துணை இராணுவப்படைகள் தடியடி நடத்தினர்.
இந்நிலையில் வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் வலதுசாரி கட்சியான ‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’, டெல்லியில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பதாக கூறி அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
கரப்பான் பூச்சிகளின் (CJP) போராட்டத்திற்கு வங்கதேச ஜமாஅத் - இ - இஸ்லாம் தனது அதிகாரப்பூர்வ ஆதரவை தெரிவித்துள்ளது. வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி அமைப்பு அந்நாட்டில் ஹிந்துக்களை அழித்தொழித் திடும் வேலையைச் செய்து வருகிறது. pic.twitter.com/pWyTI1Sv8I
உண்மை என்ன?
வங்கதேசத்தின் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி இதுபோன்றதொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறதா? என்று அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் தேடினோம்.
அப்போது, பரப்பப்படும் இந்த அறிக்கை போலியானது என்று விளக்கமளித்து ஜூலை 21ஆம் தேதியன்று ‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ கட்சி வெளியிட்டிருந்த மறுப்பு கடிதத்தை காணமுடிந்தது.
Bangladesh Jamaat-e-Islami denounces forged letter circulating on social media; demands immediate halt to malicious propaganda
Bangladesh Jamaat-e-Islami’s Assistant Secretary General and party’s central media and publicity affairs secretary Advocate Ahsanul Mahboob Zubair… pic.twitter.com/obPSdPsjCX
‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ கட்சியின் துணை பொதுச் செயலாளர் அஹ்ஸனுல் மஹ்பூப் ஜுபைர் வெளியிட்டுள்ள அந்த கடிதத்தில், ‘டெல்லி மாணவர்கள் போராட்டம் பற்றி பரப்பப்படும் இந்த அறிக்கை போலியானது’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ‘பரப்பப்படும் இந்த அறிக்கையில் நிறைய பிழைகள் இருப்பதாகவும், கட்சியின் அதிகாரப்பூர்வ பதிவு செய்யப்பட்ட முகவரி அதில் இல்லை, கட்சி வெளியிடும் அறிக்கைக்கு அவசியம் இருக்க வேண்டிய குறிப்பு எண் (Reference number) அதில் இல்லை; மேலும் அந்த அறிக்கையின் வடிவமைப்பு எதுவும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் அதிகாரப்பூர்வ வடிவத்துடன் ஒத்துப்போகவில்லை' என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து ‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்பது நிரூபணமாகிறது.
முடிவு:
டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்திற்கு ‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ ஆதரவு அளித்ததாக சொல்லி போலியான அறிக்கை சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.