யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ 2025 டிசம்பர் மாதம் கேரளாவிற்கு ஹவாலா பணத்தை கடத்த முயன்றபோது எடுக்கப்பட்டதாகும்.
பரவிய செய்தி
மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி இருந்தால் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டிய அவசியம் இருக்காது.

விரிவான விளக்கம்
தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்கள் ஆகியவற்றை சோதனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் வாகனச் சோதனையின் போது, இரு சக்கர வானகத்தின் சீட்டில் கட்டுக் கட்டாக பணத்தை போலீஸார் கைப்பற்றும் வீடியோவை பதிவிட்டு, இந்த வீடியோ தற்போது தேர்தல் நேரத்தில் பறக்கும் படை சோதனையின் போது எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி இருந்தால் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டிய அவசியம் இருக்காது. pic.twitter.com/KMkkrnwgzG
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடியதில் ’தந்தி டிவி’ யூட்யூப் தளத்தில் வெளியாகியிருந்த ஒரு செய்தியைக் காணமுடிந்தது.
2025 டிசம்பர் 24 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த செய்தியில், ’இரு சக்கர வாகனத்தின் இருக்கை மற்றும் பெட்ரோல் டேங்கில் 56 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை கேரளாவிற்கு கடத்த முயன்ற நபரை போலீசார் கோவை மாவட்டம் வேலந்தாவளம் சோதனைச் சாவடியில் கைது செய்தனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பிடிபட்ட அந்த நபர் மலப்புரத்தை சேர்ந்த ஷபீக் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2025 டிசம்பர் மாதமே ’News 18 தமிழ்நாடு’, ’மின்னம்பலம்’ ஆகிய செய்தித்தளங்களில் இந்த செய்தி வெளியாகியுள்ளதையும் காணமுடிந்தது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த சம்பவம் தற்போது தேர்தல் நேரத்தில் நடந்தது அல்ல என்பதும், இந்த வீடியோ மூன்று மாதங்கள் பழையது என்பதும் தெரிய வருகிறது.
முடிவு:
மூன்று மாதங்களுக்கு முன்னால் கேரளாவிற்கு ஹவாலா பணத்தை கடத்த முயன்றபோது எடுக்கப்பட்ட வீடியாவை, தற்போது தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள்.