யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்திய நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்து இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதனுடன் தொடர்புப்படுத்தி இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
பரவிய செய்தி
திருப்பதி கோவிலுக்கு பிரசாதம் தயாரிக்கும் ஒப்பந்தம் பெற்ற வர்களின் பெயர். இந்த பெயர்களை பார்க்கும் போது, அசைவப் பொருட்களை பிரசாதத்தில் கலந்து திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சாப்பிடகொடுத்ததில் ஆச்சரியமில்லை.

விரிவான விளக்கம்
திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக அறிக்கை வெளியானது. ’ஏ.ஆர்.டெய்ரி’ என்ற நிறுவனம் வழங்கிய நெய்யில் தான் இந்த கலப்படம் நடந்திருப்பதாகத் திருமலை திருப்பதியின் செயல் அதிகாரி சியாமள ராவ் தெரிவித்திருந்தார்.
அந்நிறுவனத்தில் முஸ்லிம்கள் உயர் பதவிகளில் இருப்பதால்தான் இந்துக்களுக்கு எதிராக இம்மாதிரியான செயல்கள் நடப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அதில், ‘A.R.Foods (Pvt) Limited’ என்ற நிறுவன பணியாளர்களின் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாகத் திருமலை திருப்பதியின் செயல் அதிகாரி சியாமள ராவ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட நெய்யில் கலப்படம்’ என்று கூறியதாக ’பிபிசி தமிழ்’ கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ்’ நிறுவனம், ’ராஜ்’ என்ற பெயரில் பால், தயிர், நெய் ஆகிய பொருள்களை விற்பனை செய்கிறது. இந்நிறுவனம் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பெயர் ராஜசேகர். இவர் பழனி தண்டாயுதபாணி அறங்காவலர் குழுவிலும் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.

தங்கள் நிறுவனம் மீதான குற்றச்சாட்டுக்கு அதன் தரக் கட்டுப்பாட்டு அலுவலர் கண்ணன் செய்தியாளர்கள் மத்தியில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பரவக் கூடிய ‘A.R.Foods (Pvt) Limited’ நிறுவனம் குறித்தும் தேடினோம். அது பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் இயங்கிவரும் அரிசி மற்றும் மசாலா பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனமாகும். இதற்கும் திருப்பதி லட்டு விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவற்றிலிருந்து பாகிஸ்தானில் இயங்கி வரும் நிறுவன ஊழியர்களைத் தமிழ்நாட்டில் இயங்கிவரும் நிறுவனத்துடன் தொடர்புப்படுத்தி மதப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பொய் செய்தி பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
திருப்பதி லட்டு செய்ய நெய் விநியோகம் செய்த நிறுவனத்தில் முஸ்லிம்கள் உயர் பதவிகளில் பணி செய்வதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. பரவக் கூடிய படத்தில் இருப்பது பாகிஸ்தானில் உள்ள மசாலா நிறுவனம். இதற்கும் திருப்பதி லட்டு விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.