யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தர்கா மற்றும் அதற்குச் செல்லும் பாதை முஸ்லிம்களுக்குச் சொந்தம் என்றுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் இல்லாததை மதப் பிரிவினை தூண்டும் நோக்கத்துடன் வதந்தி பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
1931ம் ஆண்டு Privy Council தீர்ப்பின்படி முழு மலையும் (திருப்பரங்குன்றம்) முருகனுக்குச் சொந்தம். - எச்.ராஜா

விரிவான விளக்கம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் வேண்டுதலின் அடிப்படையில் கந்தூரி எனப்படும் ஆடுகளைப் பலியிடும் வழக்கம் நீண்ட காலமாக இஸ்லாமியர்களிடையே பின்பற்றப்படுகிறது. இந்த மலைப்பகுதியில் முருகன் கோவிலும், காசி விஸ்வநாதர் கோவிலும் இருப்பதால் இந்த சடங்கினை செய்யக் கூடாது என இந்துத்துவா அமைப்பினர் தொடர் சர்ச்சையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகத் திருப்பரங்குன்றம் மலையைக் காப்பதாகக் கூறி இந்து முன்னணி கடந்த 4ம் தேதி அப்பகுதியில் போராட்டத்தை நடத்தியது. இதில், பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, ராம சீனிவாசன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பிலும் தந்தி டிவி நேர்காணலிலும் பேசிய எச்.ராஜா, ’திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகன் கோவிலுக்குச் சொந்தமானது’ என 1931ம் ஆண்டு லண்டன் Privy Council தீர்ப்பு அளித்துள்ளதாகப் பேசி வருகிறார். இதே கருத்தை பாஜக-வை சேர்ந்த அஸ்வத்தாமனும் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றமா ?! சிக்கந்தர் மலையா?! pic.twitter.com/hXzlvhq5F2
உண்மை என்ன?
திருப்பரங்குன்ற விவகாரத்தில் 1931ல் லண்டன் privy council என்ன தீர்ப்பு வழங்கியது எனத் தேடினோம். இது தொடர்பாக ‘தி இந்து’ ஊடகத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

1931ம் ஆண்டு privy council தீர்ப்பிற்கு முன்னதாக, 1923-ல் இந்த வழக்கு மதுரை கீழமை நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பைத்தான் லண்டன் privy council-லும் செல்லும் என்று கூறியுள்ளது. இந்த வழக்கு கோவிலுக்கும் மசூதிக்கும் இடையிலான முரணில் ஏற்பட்டது கிடையாது.
மசூதி உள்ள இடம், சாகுபடி செய்த இடம் மற்றும் குறிப்பிட்ட சில இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சொந்தம் எனக் கோவில் தரப்பு உரிமை கோரியது. இஸ்லாமியர்கள் மசூதி அமைந்துள்ள இடத்தை உரிமை கோரியுள்ளனர். மேலும், கட்டிடம் அமைந்துள்ள இடத்தை தவிர்த்து மற்ற இடங்கள் அரசுக்குச் சொந்தமானது என அரசு தரப்பில் உரிமை கோரப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், ’சாகுபடி செய்யப்பட்ட இடம், குறிப்பிட்ட சில இடம், மசூதி மற்றும் அதற்குச் செல்லும் பாதை ஆகியவை தவிர முழு மலையும் கோவிலுக்குச் சொந்தம்’ எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன் மேல் முறையீடு லண்டன் privy council-ல் செய்யப்பட்டது. privy council-லும் கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என 1931-ல் உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கு மற்றும் அதன் மேல் முறையீடு குறித்து privy council வழங்கிய தீர்ப்பு பற்றி முழுமையான தகவல் ’Law finder live’ தளத்தில் உள்ளது.

இதன்படி பார்க்கையில் தர்கா அமைந்துள்ள பகுதியும் அதன் பாதையும் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானது. ஆனால், இந்த தீர்ப்பினை மேற்கோள்காட்டி எச்.ராஜா முதற்கொண்டு வலதுசாரிகள் பலரும் மலை முழுவதும் கோவிலுக்குச் சொந்தம் எனத் தீர்ப்பில் இல்லாத விஷயத்தை மதப் பிரிவினையைத் தூண்டும் வகையில் பரப்பி வருகின்றனர்.
மேலும் இந்த மலை முழுவதையும் இஸ்லாமியர்கள் கையகப்படுத்த முயற்சி நடப்பதாகவும் வதந்திகள் பரப்பப்படுகிறது. இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம்.
முடிவு:
திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகன் கோவிலுக்கு சொந்தம் என்று 1931-ல் லண்டன் privy council தீர்ப்பு வழங்கியதாக எச்.ராஜா முதற்கொண்டு இந்துத்துவா அமைப்பினர் கூறும் தகவல் தவறானது. தர்கா மற்றும் அதற்குச் செல்லும் பாதை முஸ்லிம்களுக்குச் சொந்தம் என்றுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.