யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுக ஆட்சியில் கல்லூரி மாணவிகள் மது அருந்துவதாகப் பரவும் 2019 ஆண்டு பழைய வீடியோ !
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சீருடையில் உள்ள பெண்கள் சிலர் வகுப்பறையில் மது அருந்துவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. திமுக ஆட்சியில் இப்படி நடப்பதாக குறிப்பிடும் வகையில் ’இதுதான் திராவிட மாடலா?’ என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதான் திராவிட மாடலா?🤭 pic.twitter.com/kx19OzClO1
உண்மை என்ன ?
பரவக்கூடிய வீடியோ குறித்து தேடியதில், இது தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.
’Info Chand’ என்ற யூடியூப் பக்கத்தில் 2019, மார்ச் மாதம் பரவி வரும் இதே வீடியோ blur செய்யப்பட்ட நிலையில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் தலைப்பில் கள்ளிகுளம் கல்லூரி மாணவிகள் மது அருந்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து தேடியதில் , ’RJ Veg Fruits’ என்ற பேஸ்புக் பக்கத்திலும் இதே வீடியோ 2019, மார்ச் மாதம் பதிவிடப்பட்டுள்ளது. அப்பதிவில் இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகில் உள்ள கள்ளிகுளம் TDMNS கல்லூரியில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள இக்கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கப்படுகிறது. பரவக் கூடிய வீடியோவில் உள்ள சீருடையும் அக்கல்லூரி மாணவிகள் அணிந்துள்ள சீருடையும் ஒத்து போகிறது. ஆனால், தற்போது ஷாலுக்கு பதிலாக ஓவர் கோட் அணிந்துள்ளனர்.
பரவி வரும் வீடியோ 2019ம் ஆண்டில் இருந்தே சமூக வலைத்தளத்தில் உள்ளது. அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது அதிமுக. அதுமட்டுமின்றி யார் மது அருந்தினாலும் உடல் நலத்திற்கு தீங்குதான். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. அதுவும் வகுப்பறையில் மது அருந்தியது கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தால் பல மாணவிகள் பயன் அடைந்து வந்த நிலையில் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. மாணவிகள் மது அருந்தும் பழைய வீடியோக்களுடன் இத்திட்டத்தை தொடர்புபடுத்தி பொய் செய்தி பரப்புவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படியான பொய் செய்திதான் இதுவும்.
முடிவு :
திமுக ஆட்சியில் கல்லூரி மாணவிகள் மது அருந்துவதாகப் பரப்பப்படும் வீடியோ குறித்த தகவல் தவறானது. இந்த வீடியோ திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே சமூக வலைத்தளத்தில் உள்ளது.
