யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வேங்கைவயல் தொடர்பான கேள்விக்கு திருமாவளவன் கோபமாக பதிலளித்ததாக பரவும் பொய்!
பரவிய செய்தி
பட்டியலின பாதுகாவலர் என கூறிக்கொண்டு சுற்றும் திருமாவளவன் வேங்கைவயல் சம்பவம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு கோபமடைந்த சம்பவத்தை

விரிவான விளக்கம்
வேங்கைவயல் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தெரியவந்தது. இது தொடர்பான விசாரணை சுமார் 19 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் டாக்டர்.திருமாவளவனிடம் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி கேட்ட போது அவர் கோபமடைந்ததாக ‘பழைய காணொளி’ என வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
இவனா பட்டியல் சமுதாயத்திற்காக போராடும் உண்மையான தலைவன்? தொல். திருமாவளவனின் உண்மை முகம் ?
— மனதின் குரல் 🇮🇳(Mann Ki Batt) (@Namo3Namo) July 21, 2024
வேங்கை வயல் சம்பவம் பற்றி கேட்டதற்கு திருமாவளவன் செய்தியாளர்களை மிரட்டிய அந்த பழைய காணொளி?
2 வருடம் ஆகியும் இன்னும் வேங்கை வயல் சம்பவ குற்றவாளிகள் கைது இல்லை? pic.twitter.com/M18QkWyvXz
உண்மை என்ன?
திருமாவளவன் பேசிய முழு வீடியோ ’Red Pix’ யூடியூப் பக்கத்தில் 2023, ஏப்ரல் 19ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, வேங்கைவயல் தொடர்பாக முதல்வரிடம் ஏதேனும் பேசினீர்களா என்ற கேள்விக்கு, “முன்னரே இதுதொடர்பாக பலமுறை பேசியுள்ளோம். சட்டமன்றத்திலும் பேசியுள்ளோம். அந்த இடத்தில் என்ன நடந்துள்ளதோ அந்த உண்மையை கண்டறிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றவாளியை கைது செய்வதற்கான உறுதியை அளித்திருக்கிறார்கள்” என பதில் அளித்துள்ளார்.
சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகியும் குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை என்ற கேள்விக்கு, “நாள் என்பது ஒரு பிரச்சனை அல்ல. ராமஜெயம் படுகொலையில் இத்தனை ஆண்டுகள் ஆகியும் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு நாம் உள்நோக்கம் கண்டுபிடிக்க முடியுமா? சில வழக்குகளில் நிர்வாக சிக்கல்கள் இருக்கலாம். இன்னும் உறுதிபடுத்தப்பட வேண்டிய தகவல்கள் இருக்கலாம். வேங்கைவயல் பிரச்சனையில் யாரையும் காப்பாற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபடவில்லை” என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில் (9.45), செய்தியாளர் ஒருவர் திருமாவளவனை பார்த்து ’திமுககாரர் மாதிரி பேசுகிறீர்கள்’ என்றதும், “இந்த மாதிரி பேசும் வேலை வைத்துக் கொள்ளாதீர்கள். இது நாகரிகம் இல்லாத பேச்சு. Factual கேள்வியாக கேளுங்கள். உங்கள் கருத்தை திணிக்காதீர்கள். ஊடகவியளாலருக்கு என்ன மரியாதையோ அந்த மரியாதை கொடுக்கும் அளவுக்கு கேள்வியை கேளுங்கள். திமுகவை எதிர்த்து எங்களை மாதிரி யாரும் போராட்டத்தை நடத்தவில்லை. தலித் பிரச்சனைகளுக்காக இந்த இரண்டு ஆண்டில் 10 போராட்டம் நடத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
வேங்கைவயல் தொடர்பான கேள்விகளுக்கு திருமாவளவன் நிதானமாகவே பதிலளித்துள்ளார். அவரை திமுககாரர் மாதிரி பேசுகிறீர்கள் என செய்தியாளர் ஒருவர் சொன்னதற்கு அளித்த பதிலை வேங்கைவயலுக்கு அளித்த பதிலாக எடிட் செய்து தவறாக பரப்பப்படுகிறது.
மேலும் படிக்க: எம்.பி திருமாவளவனின் உண்மையானப் பெயர் “திருமால் வளவனா” ? - ஆதாரத்துடன் விளக்கம் !
திருமாவளவன் குறித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்தும் பரப்பப்பட்ட பொய் செய்திகள் பற்றி யூடர்னில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க: டி-ஷர்ட்டில் காதல் வசனம்: விசிக லோகோ, திருமாவளவன் படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பப்படும் புகைப்படம்!
முடிவு:
வேங்கைவயல் தொடர்பான கேள்விக்கு திருமாவளவன் கோபமாக பதில் அளித்தகாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது.