யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகை ஏமாற்றம் அளிக்கிறது என்றும், சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேரை கைது செய்தால் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
பரவிய செய்தி
வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது FIR போடப்பட்டதைப் பற்றி திருமாவளவன் பேசவில்லை - ஆதவ் அர்ஜூனா

விரிவான விளக்கம்
டிசம்பர் 24 அன்று கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் த.வெ.க பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீது FIR போடப்பட்டதைப் பற்றி திருமாவளவன் பேசவில்லை என்றும், அது தான் கூட்டணி தர்மம் என்றும் தெரிவித்தார்.
உண்மை என்ன?
ஆதவ் அர்ஜூனா கூறிய இந்த தகவல் குறித்து தேடினோம். அப்போது Thanthi TV ஊடகத்தில் “வேங்கைவயல் விவகாரம் - திருமா பரபரப்பு பேட்டி” என்ற தலைப்பில், ஜனவரி 26, 2025 அன்று விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியை பார்க்கமுடிந்தது. அதில் 0.33 விநாடியில் பேசியுள்ள அவர், “வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகை ஏமாற்றம் அளிக்கிறது. இந்த குற்றப்பத்திரிக்கையை ஏற்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து ஒரு மனுவை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேரை கைது செய்தால் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேரிடும்” என்றும் தெரிவித்திருந்தார்.
அதே போல் தொல்.திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் ஜனவரி 24, 2025 அன்று அறிக்கை ஒன்றினை பதிவு செய்துள்ளார். அதில், "வேங்கைவயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ. டி சார்பில் இன்று பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே, சி பி சி ஐ டி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்." என்று திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
வேங்கைவயல் வழக்கு:
----------------
காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது!
இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
----------------------
வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல்… pic.twitter.com/2VGWFGOvDY
முடிவு:
எனவே, "வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது FIR போடப்பட்டதைப் பற்றி திருமாவளவன் பேசவில்லை" என ஆதவ் அர்ஜுனா பரப்பும் செய்திகள் தவறானவை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததற்கு ஜனவரி 24, 2025 அன்றே தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.