யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள ராம்கஞ்ச் மண்டி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உணவு வழங்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.
போராடிய எந்த விவசாயிகளாவது பஞ்சாப் மழை வெள்ளத்தில் உதவி செய்து பார்த்ததுண்டா? ஆனால் சங்க ஸ்வயம் சேவகர்கள் களத்தில் நிற்கிறார்கள்!

விரிவான விளக்கம்
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 55 பேர் இறந்துள்ளனர். சுமார் 2000 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய். 13,000 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில பத்தாண்டுகளாக பஞ்சாப் மாநிலம் இதுபோன்றதொரு மோசமான வெள்ளத்தை சந்தித்ததில்லை.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்த சிலர் ட்ராக்டரில் சென்று, மழை வெள்ளம் பாதித்த கிராமப்புற வீடுகளில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கும் வீடியோவை பதிவிட்டு, ‘இதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் சேவை. பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் களத்தில் நின்று சேவை செய்கிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய எந்த விவசாயிகளாவது பஞ்சாபில் ஏற்பட்ட இந்த வெள்ள பாதிப்பின் போது சேவை செய்து நீங்கள் கண்டதுண்டா’ என்று பாஜகவைச் சேர்ந்தவர் சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார்.

உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’சனாதனி ஹிந்து’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. ஆனால் இந்த வீடியோ சுமார் 6 வாரங்களுக்கு முன்பே பதிவிடப்பட்டிருப்பதை காண்கிறோம். மேலும், இதில் பீகாரில் வெள்ளம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண்கிறோம்.

மேலும் இது குறித்து தேடுகையில், ‘RSS Times’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதில் இந்த வீடியோ ஜூலை மாதம் 29ஆம் தேதியன்று வெளியிடப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவில், ‘ராஜஸ்தானில் உள்ள ராம்கஞ்ச் மண்டியில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க தொண்டர்கள் கடந்த ஜூலை 28, 2025 அன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று சேவை செய்தோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் ‘Friends of RSS’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் உணவு வழங்குவது போன்ற புகைப்படக்களை பதிவிட்டு, ராஜஸ்தானின் ராம்கஞ்ச் மண்டியில் வெள்ளம் பாதித்த இடங்களில் உள்ள குடும்பங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் சார்பில் உணவு, குடிநீர் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு கடந்த ஜூலை 21ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் இந்த வீடியோ கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள ராம்கஞ்ச் மண்டியில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
முடிவு:
கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள ராம்கஞ்ச் மண்டி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உணவு வழங்கிய போது எடுக்கப்பட்ட வீடியோவை, தற்போது பஞ்சாப் வெள்ளத்தின் போது ஆர்.எஸ்.எஸ் களத்தில் நின்று சேவை செய்ததாக பாஜகவைச் சேர்ந்தவர் திரித்துப் பரப்புகிறார்.