யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
1950 ஆம் ஆண்டுக்கு பிறகு, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அனைவரும் பார்க்க வருவார்கள். அப்போது அவர் ‘ஓம் மணி பத்மாயா’ என்ற ஒரு வார்த்தை சொல்வார். அதன் பொருள் “தாமரை விழித்தெழட்டும்” என்பதாகும் என்று ம. வெங்கடேசன் கூறியுள்ளார்.
பரவிய செய்தி
1950 ஆம் ஆண்டுக்கு பிறகு, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அனைவரும் பார்க்க வருவார்கள். அப்போது அவர் ‘ஓம் மணி பத்மாயா’ என்ற ஒரு வார்த்தை சொல்வார். அதன் பொருள் “தாமரை விழித்தெழட்டும்” என்பதாகும் - ம. வெங்கடேசன்.
விரிவான விளக்கம்
சமீபத்தில் நடைபெற்ற “சாணக்கியாவின் உரை வீச்சு” என்ற நிகழ்ச்சியில் பேசிய ம. வெங்கடேசன், "1950 ஆம் ஆண்டுக்கு பிறகு, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அனைவரும் பார்க்க வருவார்கள். அப்போது அவர் ‘ஓம் மணி பத்மாயா’ என்ற ஒரு வார்த்தை சொல்வார். அதன் பொருள் “தாமரை விழித்தெழட்டும்” என்பதாகும்.
இந்தியா முழுவதும் தாமரை விழித்தெழுந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் அண்ணல் அம்பேத்கரின் கனவான தாமரை விழித்தெழும்” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் ம. வெங்கடேசன் பேசியுள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதைக் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், ம. வெங்கடேசன் கூறியுள்ளது போன்று, அது ‘ஓம் மணி பத்மாயா’ கிடையாது, ‘ஓம் மணி பத்மே ஹம்’ என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து ஆய்வு செய்ததில், ‘ஓம் மணி பத்மே ஹம்’ என்ற வாக்கியத்தின் பொருள் குறித்து திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைவரான தலாய் லாமா பேசிய வீடியோ ஒன்று கிடைத்தது.
“தலாய் லாமாவின் ஓம் மணி பத்மே ஹங் என்பதன் அர்த்தம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், “ஓம் என்பது அ, ஓ, ம என்ற 3 எழுத்துகளைக் கொண்டது, இது தூய்மையற்ற உடல், பேச்சு மற்றும் மனம் ஆகிய மூன்றைக் குறிக்கிறது. மணி என்பதன் பொருள் “அணிகலன் or நகை”, பத்மா என்பதன் பொருள் “ஞானம்” மற்றும் ஹம் என்பதன் பொருள் “இணைப்பு”.
எனவே இவை இரக்கம், அன்பு மற்றும் ஞானத்தின் இணைப்பைக் குறிக்கின்றன. தூய்மையற்ற உடல், பேச்சு மற்றும் மனம் ஆகிய மூன்றையும் சுத்திகரித்து, புத்தரின் தூய்மையான, ஞான நிலையை அடைவதற்கான செயல்முறையே இந்த வாக்கியம்” என்று அவர் விளக்கமளித்துள்ளதைக் காண முடிகிறது.
இதே போன்று “Study Buddhism” என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவிலும், மேலே கூறப்பட்டுள்ள அதே விளக்கமே கொடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும் இது குறித்து பல பக்கங்களை ஆய்வு செய்தோம். அதில் எதிலுமே, ‘ஓம் மணி பத்மே ஹம்’ என்பதன் பொருள் “தாமரை விழித்தெழட்டும்” என்று குறிப்பிடப்படவில்லை.
முடிவு:
நம் தேடலில், ‘ஓம் மணி பத்மே ஹம்’ என்பதன் பொருள் “தாமரை விழித்தெழட்டும்” என்று ம. வெங்கடேசன் கூறியிருப்பது போன்று எதிலும் குறிப்பிடப்படவில்லை என்பதை அறிய முடிகிறது.