யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் பண மோசடி தொடர்க்காக அமலாக்கத்துறையால் பதியப்பட்ட வழக்குகளில் தண்டனை விகிதம் 6.42 சதவீதம் மட்டுமே ஆகும்.
பரவிய செய்தி
தமிழ்நாடு போலீஸின் வழக்குகளில் தண்டனை விகிதம் 20 சதவீதம் கூட இல்லை. ஆனால் அமலாக்கத்துறையின் வழக்குகளில் தண்டனை விகிதம் 95 சதவீதம் என்று எச்.ராஜா செய்தியாளர் சந்திப்பில் கூறுக்கிறார்.

விரிவான விளக்கம்
கடந்த மார்ச் 6ஆம் தேதியன்று ‘அமலாக்கத்துறை’ தமிழ்நாட்டின் டாஸ்மாக் நிறுவனம் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. 25 இடங்களில் சோதனை நடத்திய பின்னர், 1000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எச்.ராஜா, ‘தமிழ்நாடு காவல்துறையின் வழக்குகளில் தண்டனை விகிதம் (Conviction rate) 20 சதவீதம் கூட இல்லை. ஆனால் அமலாக்கத்துறையின் வழக்குகளில் தண்டனை விகிதம் 95 சதவீதம்’ என்று பேசினார்.
உண்மை என்ன?
அமலாக்கத்துறையின் தண்டனை விகிதம் குறித்து இணையத்தில் தேடியதில், ’Live Law’ செய்தித்தளத்தில் செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.
அதன்படி, 01.01.2019 முதல் 31.10.2024 வரையிலான ஐந்தாண்டுக் காலத்தில் பண மோசடி தொடர்க்காக அமலாக்கத்துறையால் பதியப்பட்ட 911 வழக்குகளில் 654 வழக்குகளில் விசாரணை நிறைவுற்றுள்ளது. ஆனால், அதில் வெறும் 42 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் தண்டனை விகிதம் 6.42 சதவீதம் மட்டுமே ஆகும்.

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி இந்த தகவலை நாடாளுமன்றத்தில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தேடியதில், 2022 ஜீலை மாதம் ’Hindustan Times’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியில், ’2022ஆம் ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில் அமலாக்கத்துறை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 5,422 வழக்குகள் பதிவு செய்திருக்கிறது. அதில் 23 குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் தண்டனை விகிதம் 0.5 சதவீதத்திற்கும் குறைவானதாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 முதல் 2025 வரையிலான 10 ஆண்டுகளில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்ற அரசியல் தலைவர்கள் மீது அமலாக்கத்துறையால் 193 வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது. இதில் இரண்டு வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற ‘Live Law’ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பண மோசடி வழக்குகளில் தண்டனை விகிதம் குறைவாக இருப்பது பற்றி உச்ச நீதிமன்றமே சில நேரங்களில் விமர்சித்துள்ளது.

இதிலிருந்து அமலாக்கத்துறையின் தண்டனை விகிதம் 95 சதவீதம் என்று சொல்லப்படுவது உண்மையல்ல என்பது நிரூபணமாகிறது.
முடிவு:
அமலாக்கத்துறை வழக்குகளில் தண்டனை விகிதம் 95 சதவீதம் என்ற தவறான தகவலை எச்.ராஜா செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.