யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டைக் காட்டிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது.
பரவிய செய்தி
இந்தியாவிலேயே பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு. -அண்ணாமலை
விரிவான விளக்கம்
பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ”இந்தியாவிலேயே பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. கர்நாடகாவுக்கும் நமக்கும் (தமிழ்நாடு) ரூ.7 வித்தியாசம்” எனக் கூறியுள்ளார்.
உண்மை என்ன?
தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து பாஜகவினர் பேசிய பல பொய்கள் பற்றிய உண்மைகள் இதற்கு முன்னர் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம் என அண்ணாமலை சொன்ன தகவல் குறித்து இணையத்தில் தேடினோம். பெட்ரோல், டீசல் விலை குறித்துப் பல ஊடகங்களில் தளத்தில் தினமும் பதிவிடுவது வழக்கம். அப்படி மாநிலவாரியாக ‘Live mint’ தளத்தில் உள்ள விலைப்பட்டியலை ஆய்வு செய்தோம்.
தமிழ்நாட்டில் இன்றைய தேதிப்படி (ஜூலை, 22) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.98. இதே நேரத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய மத்தியப் பிரதேசம் (ரூ.106.29), மகாராஷ்டிரா (ரூ.103.44), பீகார் (ரூ.105.68), ராஜஸ்தானில் (ரூ.104.88) தமிழ்நாட்டைக் காட்டிலும் பெட்ரோல் விலை அதிகமாகவே உள்ளது. மேலும் அண்ணாமலை குறிப்பிட்ட கர்நாடகாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.86 -ஆக உள்ளது.

இதேபோல் கர்நாடகாவில் ஒரு லிட்டர் டீசல் ரூ.88.94-ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ரூ.92.56-ஆக உள்ளது. தமிழ்நாட்டின் டீசல் விலைதான் இந்தியாவிலேயே அதிகமா என்றால் இல்லை. ஆந்திரா ரூ.96.17; கேரளா ரூ.96.13; தெலங்கானா ரூ.95.65; சத்தீஸ்கர் ரூ.93.20 ஆக உள்ளது. ஆனால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம் எனத் தவறான தகவலை அண்ணாமலை பேசியுள்ளார்.
மேலும் படிக்க: தமிழ்நாடு குறித்து கர்நாடகாவில் அண்ணாமலை சொன்ன பொய்கள்!
மேலும் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் காலை உணவுத் திட்டத்தை புதிய கல்விக் கொள்கை மூலம் ஒன்றிய அரசு கொண்டு வந்தது எனப் பேசியுள்ளார்.
இதே பொய்யான செய்தியை இதற்கு முன்பும் அண்ணாமலை பேசியுள்ளார். காலை உணவு வழங்குவதன் மூலம் கற்றல் திறனை அதிகரிக்க முடியும் என ஆய்வுகள் கூறுவதாக புதிய கல்விக் கொள்கை-2020ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை நீண்டகால திட்டம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், எந்த இடத்திலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்றோ இதற்கான நிதியை ஒன்றிய அரசு கொடுக்கும் என்றோ குறிப்புகள் இல்லை. புதிய கல்விக் கொள்கையில் காலை உணவு திட்டம் குறித்து இருப்பது வெறும் பரிந்துரை மட்டுமே.
தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக 2024-25 நிதிநிலையில் ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து காலை உணவுத் திட்டம் ஒன்றிய அரசு கொண்டுவந்து நிதியளிப்பதுபோல் அண்ணாமலை சொன்ன தகவல் பொய்யானது என்பதை உறுதி செய்யமுடிகிறது.
முடிவு:
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகம் என அண்ணாமலை சொன்ன தகவல் தவறானது.
