யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆவின் பால் (Fresh Milk) பாக்கெட்டுகளுக்கு GST இல்லை. பொதுவாக அனைத்து வகையான பால் (Fresh Milk) பாக்கெட்டுகளுக்கும் ‘GST விலக்கு’ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர், ஐஸ்கிரீம், வெண்ணெய் முதலிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே GST உண்டு.
பரவிய செய்தி
ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலியாக அனைத்து நிறுவங்களில் விலை குறைப்பு செய்துள்ளனர். ஆனால் ஆவினில் பால் பாக்கெட்டுகளுக்கு விலை குறைப்பு செய்யப்படவில்லை. கேட்டால் Stock இருப்பதால் தான் குறைக்கவில்லை என்பது போன்று சொல்கின்றனர். இது குறித்து விசாரிக்க வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்.
விரிவான விளக்கம்
ஜிஎஸ்டி வரிக் குறைப்பு சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கார்கள் வரை பலவற்றின் விலை பெருமளவில் குறைந்துள்ளது. 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி விகிதம், 5 மற்றும் 18 சதவீதம் என இரு அடுக்குகளாக மட்டும் மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஆளுநரும், பாஜகவைச் சேர்ந்தவருமான தமிழிசை சௌந்தரராஜன் சமீபத்தில் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் “பால் முகவர்கள் மற்றும் விவசாயிகள் ஜிஎஸ்டி வரிகுறைப்பிற்காக பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டனர். ஆனால் இங்கு ஆவினில் நிர்வாக ரீதியாக விசாரிக்க வேண்டும். ஆவினில் பால் பாக்கெட்டுகளுக்கு விலை குறைப்பு செய்யப்படவில்லை. சில இடங்களில் ஆவினில் 20ரூ. பால் பாக்கெட்டுகளில் விலை குறைப்பு செய்துள்ளனர் என்று கூறுகின்றனர். ஆனால் இங்கு எந்த பாலுக்கும் விலை குறைக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். மேலும் அவர்கள் சொல்கிறார்கள் stock இருப்பதால் பழைய விலை என்று. ஆனால் stock இருந்தாலும் குறைக்க வேண்டும் என்று தான் அறிவித்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஒரு நடுத்தர குடும்பம் வருடத்திற்கு ரூ.50,000 சேமிக்க முடியும் - தமிழிசை
#GST | #Tax | #TamilisaiSoundararajan | #BJP | #PolimerNews pic.twitter.com/VitmTkEFCm
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், ஆவின் பால் (Fresh Milk) பாக்கெட்டுகளுக்கு GST இல்லை. பொதுவாக அனைத்து வகையான பால் (Fresh Milk) பாக்கெட்டுகளுக்கும் ‘GST விலக்கு’ நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.
பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர், ஐஸ்கிரீம், வெண்ணெய், மில்க் சாக்லேட், பால் பவுடர், இனிப்புவகைகள் முதலிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே GST உண்டு.
மேலும் பன்னீர், நெய் ஆகியவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் தற்போது குறைத்துள்ளது. அதன்படி,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பன்னீர் 110 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 500 கிராம் பன்னீர் 275 ரூபாயாகவும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் விலை 690 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக குறைக்கப்பட்டிருப்பதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது UHT பாலுக்கும் GSTல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், ஆவினில், 150 மில்லி UHT பால் விலை 12 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பால் (Fresh Milk) பாக்கெட்டுகளுக்கும் ‘GST விலக்கு’ நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற உண்மைத் தன்மை அறியாமல் பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்.
மேலும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய், சீஸ், ஐஸ்கிரீம், பிற பால் கொழுப்புப் பொருட்கள் (Other Dairy Fat Products), சர்க்கரை சேர்த்து செறிவூட்டப்பட்ட கெட்டிப்பால் (Condensed Milk), பால் சேர்க்கப்பட்ட பானங்கள் (Beverages containing milk) உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆவினில் நெய், பன்னீர் மற்றும் UHT பாலுக்கு மட்டுமே பண்டிகை கால சலுகை எனக் கூறி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
முடிவு:
நம் தேடலில், அனைத்து வகையான பால் (Fresh Milk) பாக்கெட்டுகளுக்கும் ‘GST விலக்கு’ நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை அறியாமல், தமிழிசை சௌந்தரராஜன் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார் என்பதை அறிய முடிகிறது.