யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
"கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை தனக்கு ஹிந்தி தெரியாது என்று கூறுகிறார், அதனால் அவருக்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டதா?" என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்காக பாஜக தரப்பில் இருந்து, கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை ஹிந்தியில் பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டனர்.
பரவிய செய்தி
இப்படி அழகா இந்தி பேசும் சுந்தர் பிச்சை படித்தது மூன்று மொழி கொள்கை, அந்த தனியார் பள்ளிக்கூடம் பெயர் "ஜவகர் வித்யாலயா CBSE பள்ளி"

விரிவான விளக்கம்
ஒன்றிய அரசு அமல்படுத்த நினைக்கும் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, PM SHRI பள்ளிகள் தொடர்பாக தமிழ்நாட்டு அரசியல் சூழலில் கடந்த சில வாரங்களாக தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், "கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை தனக்கு ஹிந்தி தெரியாது என்று கூறுகிறார், அதனால் அவருக்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டதா?" என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்காக பாஜக தரப்பில் இருந்து, கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை ஹிந்தியில் பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டனர்.
இருமொழிக் கல்வி படித்த கூகுல் தலைவர் சுந்தர் பிச்சைக்கு ஹிந்தி தெரியாது - பி.டி.ஆர்
இப்படி அழகா இந்தி பேசும் சுந்தர் பிச்சை படித்தது மூன்று மொழி கொள்கை, அந்த தனியார் பள்ளிக்கூடம் பெயர் "ஜவகர் வித்யாலயா CBSE பள்ளி" pic.twitter.com/MnclfmXdYh
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் இருந்த ‘THINK RIGHT ME’ என்ற Water Mark-ஐ வைத்து தேடி பார்த்தோம். அப்போது Think Right என்ற யூடியூப் பக்கத்தில் 2019ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி சுந்தர் பிச்சை பங்கேற்ற நிகழ்ச்சி குறித்த வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர் ஆங்கிலத்தில் பேசியிருந்தார்.
இதையடுத்து சுந்தர் பிச்சை ஹிந்தியில் பேசும் வீடியோவில் வரும் Subtitleஐ வைத்து, யூடியூப் பக்கத்தில் இருந்த வீடியோவை ஒப்பிட்டு பார்த்தோம். அதில் சரியாக 15 நிமிடத்திற்கு மேல் இடம் பெற்றிருந்த காட்சியை எடுத்து, சுந்தர் பிச்சை ஹிந்தியில் பேசுவது போல் டப் செய்திருந்தது உறுதியானது.
இது குறித்து மேலும் தேடி சென்ற போது, சுந்தர் பிச்சை அளித்த நேர்காணால் ஒன்று கிடைத்தது. அதில் அவர் பேசுகையில், ”நான் பள்ளியில் ஹிந்தி கற்றுக்கொண்டேன். ஆனால், அதிகம் பேசியதில்லை” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை ஆங்கிலத்தில் பேசிய வீடியோவை, ஹிந்தியில் டப் செய்து தவறான தகவலை பரப்பியது உறுதியானது.
முடிவு:
இறுதியில் சுந்தர் பிச்சை ஹிந்தியில் பேசுவது போல் பரப்பப்படும் வீடியோ டப் செய்யப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது.