யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் புகைப்படம், கடந்த 2017ல் சென்னை மெட்ரோ ரயில் பாதைக்கான சுரங்கப்பாதை தோண்டும் பணியின் போது, ‘ஆயிரம் விளக்கு’ பகுதி அருகே பள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
திமுக ஆட்சியில் சென்னையில் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு பேருந்து மற்றும் கார் அந்த பள்ளத்தில் மாட்டிக்கொண்டுள்ளது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
DMK 2.0 👇#SingaraPotholeCHENNAI pic.twitter.com/UbvXJThjlo
உண்மை என்ன?
பரவி வரும் இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது BBC Tamil ஊடகத்தில், “சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: சீரமைப்பு பணிகள் நாளை மாலை முடிவைடையும்” என்ற தலைப்பில் இது குறித்து ஏப்ரல் 09, 2017 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஒரு பேருந்து மற்றும் கார் ஆகியவை சிக்கின என்றும், எனினும், காரில் சென்ற மருத்துவரும், பஸ் பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் The Hindu ஊடகத்தில் ”Major cave-in on Chennai’s Anna Salai” என்ற தலைப்பில் இது குறித்து ஏப்ரல் 10, 2017 அன்று செய்தி வெளியாகியிருந்தது. சென்னை மெட்ரோ ரயில் பாதைக்கான சுரங்கப்பாதை தோண்டும் பணியின் போது, ஆயிரம் விளக்கு பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து பேருந்தில் இருந்த முப்பத்தைந்து பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே போல் இந்தியன் எக்ஸ்பிரஸ், சமயம் தமிழ் போன்ற ஊடகங்களில் இது குறித்து 2017ஆம் ஆண்டே செய்தி வெளியாகியிருந்ததையும் பார்க்கமுடிந்தது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது.

முடிவு:
எனவே பரவி வரும் புகைப்படம், கடந்த 2017ல் சென்னை மெட்ரோ ரயில் பாதைக்கான சுரங்கப்பாதை தோண்டும் பணியின் போது, ‘ஆயிரம் விளக்கு’ பகுதி அருகே பள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது. இதை தற்போது நடந்தது போல் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
