YouTurn

ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்ற அரசியல் தலைவர்கள் எனப் பரவும் போலிச் செய்தி!

ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்ற அரசியல் தலைவர்கள் எனப் பரவும் போலிச் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

உண்மை, உண்மை, உண்மை தவிர வேறு இல்லை என்று நினைக்கிறேன்! நான்..See More. ‘ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் தலைவர்கள் பெயர் பட்டியல் வெளியீட்டது. திரு.பா.சிதம்பரம் – 66 கோடி; திரு.மு.க.ஸ்டாலின் – 54 கோடி; திரு.வை.கோபால்சாமி – 52 கோடி; திருமதி. கீதா ஜீவன் – 22 கோடி; திரு.தா.பாண்டியன் – 8 கோடி; திருமதி. சசிகலா புஷ்பா – 3 கோடி; தூத்துக்குடி கிறிஸ்தவ கூட்டமைப்பு – 17 கோடி; - ஸ்டெர்லைட் நிர்வாகம்’.



Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பங்கேற்ற ' எண்ணித் துணிக' நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து நேற்று பேசினார். அதனைத் தொடர்ந்து இன்று புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதாகக் கூறிய பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பதிவில் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் தலைவர்கள் என்று பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.



Archive Link

உண்மை என்ன ?

பரவக் கூடிய பதிவுக் குறித்து புதிய தலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். அப்படி எந்த பதிவும் அவர்களது பக்கத்தில் பதிவிடப்படவில்லை. மேற்கொண்டு அப்படத்தைக் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், அந்த பதிவு ஏற்கனவே 2018 இல் பரவலாக பலராலும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

https://twitter.com/kichaa83/status/999846003057422336

Archive Link

மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் பணம் பெற்றிருப்பதாக கூறிப் பகிரப்பட்ட பல பதிவுகள் புதிய தலைமுறை தொலைக்காட்சி மட்டுமின்றி பிற தொலைக்காட்சிகள் வெளியிட்டதாகவும் பரப்பப்பட்டுள்ளது. 2018 இல் வைரலான இப்பதிவு தற்போது மீண்டும் பரவக் காரணங்களையும் பின்னணியையும் தற்போதுக் காணலாம்.


ஸ்டெர்லைட் ஆலை அல்லது ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் மீளவிட்டான் பகுதியில் அமைத்துள்ள தாமிர உருக்கு தொழிற்சாலை. இதன் உரிமையாளர் அனில் அகர்வால் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட வேதாந்தா ரிசேர்ஸஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் ஆவார். வேதாந்தா நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தாமிரத்தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன.

இந்நிலையில் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், 2018 இல் இப்போராட்டங்கள்  தீவிரமடைந்தன. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28, 2018 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு அப்போதைய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதனை அடுத்து 15 டிசம்பர் 2018 இல் தேசிய பசுமை தீர்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை ஏதுமில்லை என உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் போராட்டம் அதன் தீவிரத் தன்மையை அடைய ஆரம்பித்தது. அன்றிலிருந்தே சமூக வலைதளங்களில் ஸ்டெர்லைட் தொடர்பான பதிவுகள் பரவலாகப் பகிரப்ப்பட்டுவந்தன.

மேலும் பார்க்க: ஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்

மேலும் பார்க்க: ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற கட்சிகள்.

ஸ்டெர்லைட் ஆலை பற்றிய ஆளுநரின் சர்ச்சைப் பேச்சு:

இந்நிலையில் தற்போது சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், இந்திய குடிமை பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பங்கேற்ற ' எண்ணித் துணிக' நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி “நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து திட்டங்கள் தீட்டப்பட்டு இதற்காக பல கோடி ரூபாய் நிதி நம் நாட்டுக்குள் அனுப்பி வைக்கப்படுகிறது. கூடங்குளம் அணு உலை வரும் போதும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் மக்களைத் தூண்ட இதுபோன்ற நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.” எனப் பேசியுள்ளது அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்தே சமீபமாக புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதாகக்கூறி ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்ற அரசியல் தலைவர்கள் என்ற போலி நியூஸ் கார்டு பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்ற அரசியல் கட்சி பட்டியல்:

கட்சிகள் பெறும் நிதியானது 20,000க்கும் அதிகமாக சென்றால், அது பற்றிய விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கட்சியின் சார்பில் தெரிவிக்க வேண்டும். அதன்படி ஸ்டெர்லைடின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.



இவ்வாறு, தேசிய-மாநில கட்சிகள் எந்தெந்த அமைப்புகள், நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு நன்கொடை பெற்றன என்பது பற்றிய விவரங்கள் அடங்கிய அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்து வருகின்றனர். அதில், தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு வேதாந்தா நிறுவனம் கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது.



இதன் மூலம் வைரலாகிக் கொண்டிருக்கும் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் நன்கொடை பெற்றிருப்பதற்கான விவரங்ககள் எதுவும் தேர்தல் ஆணையத்திடம் (ECI) தாக்கல் செய்யப்பட வில்லை. மேலும் புதியதலைமுறையின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் மே 24, 2018 அன்று “புதியதலைமுறையின் பெயரில் இதுபோன்ற போலியான தகவல் பரப்பப்படுகிறது, யாரும் நம்ப வேண்டாம். பிற தொலைக்காட்சிகள் பெயரிலும் இதே போன்ற தகவல் பரப்பபடுகிறது” என்றும் பகிரப்பட்டுள்ளது.

https://twitter.com/PTTVOnlineNews/status/999671996362375168

Archive:

முடிவு :

நம் தேடலில், புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதாகக்கூறி, ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்ற அரசியல் தலைவர்கள் பட்டியல் எனப் பரப்பப்பட்ட பதிவு தவறானது என்றும் அவர்களது அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளப் பக்கங்கள் எதிலும் அப்பதிவு பதிவிடப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க