யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பலாத்காரம் என்றால் ‘வன்முறை’ என்ற பொருளும் உள்ளது. அந்த அர்த்தத்தின் அடிப்படையில் ’வன்முறை போராட்டம்’ என்று தான் ஸ்டாலின் பேசியுள்ளார்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் ‘பலாத்கார போராட்டம்’ எனக் கூறியதாக ’இளைய பாரதம்’ என்ற எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
என்னது பலாத்கார போராட்டமா ????
#Vaikkam100 pic.twitter.com/Z49oYenOK3
நல்ல வேலை இதையெல்லாம் பார்க்க பெரியார் உயிரோட இல்ல இருந்து இருந்தா தடியாலையே அடிச்சி விரட்டி இருப்பாரு
அவ்வீடியோவில், ”பலாத்கார போராட்டம் நடத்தியிருந்தால் கூட இந்த வெற்றியை இவ்வளவு சீக்கிரம் பெற்றிருக்க மாட்டோம் எனப் பேசினார் தந்தை பெரியார்” என்று ஸ்டாலின் கூறுகிறார்.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோ குறித்துத் தேடியதில், இது கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் பேசியது என்பதை அறிய முடிந்தது.
திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களிலும் அதற்கு எதிரே உள்ள தெருவிலும் தாழ்த்தப்பட்டோர் நடந்து செல்லக் கூடாது என்ற தீண்டாமை பின்பற்றப்பட்டது.
இதனை எதிர்த்து வழக்கறிஞர் மாதவன், கேசவ மேனன், டி.கே.மாதவன், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் முதலான பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைத் திருவிதாங்கூர் சமஸ்தானம் கைது செய்தது. போராட்டத்தை தொடர்ந்து வழிநடத்தத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த பெரியாருக்குக் கடிதம் எழுதப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தை வெற்றிப் பாதைக்குப் பெரியார் அழைத்துச் சென்றார். அவரது செயலினால் ’வைக்கம் வீரர்’ எனப் போற்றப்படுகிறார்.
இப்போராட்ட வெற்றியின் நூற்றாண்டைக் கேரளா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து கொண்டாடி வருகிறது. அந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய முழு வீடியோ ’சன் நியூஸ்’ யூடியூப் பக்கத்தில் உள்ளது. அதில் 12வது நிமிடத்திற்கு மேல் பரவக் கூடிய பகுதி இடம்பெற்றுள்ளது.
வைக்கம் போராட்ட வெற்றியைத் தொடர்ந்து பேசிய பெரியார், ”உரிமையை மறுத்த அரசாங்கமே நம்மை இப்போது கையை பிடித்து அழைத்துக் கொண்டு செல்கிறது. இது தான் சத்தியாகிரகத்தின் மகிமை. பலாத்கார போராட்டம் நடத்தி இருந்தால் கூட இவ்வளவு சீக்கிரம் வெற்றி பெற்றிருக்க மாட்டோம்” எனக் கூறியதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பலாத்கார என்றால் வன்முறை என்கிற பொருளும் உள்ளது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் பலாத்காரம் என்ற சொல் பாலியல் வன்புணர்விற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலே உள்ள வாக்கியத்தில் ’பலாத்கார போராட்டம்’ என்பது ’ஆயுதம் ஏந்திய (வன்முறை) போராட்டம்’ என்கிற பொருளில் கூறப்பட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தில் பெரியார் கூறியதை ஸ்டாலின் மேற்கோள் காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேரறிஞர் அண்ணாவின் 'எண்ணித் துணிக கருமம்' புத்தகத்திலும் பலாத்காரம் என்ற வார்த்தை வன்முறை என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.
கரிசல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் எழுதிய ‘கோபல்லபுரத்து மக்கள்’ புத்தகத்திலும் பலாத்காரம் என்ற வார்த்தை வன்முறை என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றிலிருந்து ‘பலாத்கார போராட்டம்’ என முதல்வர் கூறியது வன்முறை என்ற அர்த்தத்தில் தான் என்பதை அறிய முடிகிறது. ஆனால், முதல்வர் பேசியதைத் திரித்து தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.
முடிவு:
’பலாத்கார போராட்டம்’ என்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. பலாத்காரம் என்றால் ‘வன்முறை’ என்ற பொருளும் உள்ளது. அந்த அர்த்தத்தின் அடிப்படையில் ’வன்முறை போராட்டம்’ என்று பெரியாரின் வார்த்தைகளைத் தான் ஸ்டாலின் மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
