யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2025ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பரிசு வழங்கிய தொகுப்பாகும். இதை தற்போது நடைபெறவுள்ள தேர்தலுக்காக வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் என்று தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
தேர்தல் நேர்மையா நடந்துட்டு இருக்குனு
நம்மதான் கனவுல இருக்கோம் போல..
இதுதான் நேர்மையான தேர்தலா!?!?
Name போட்டு தரானுங்க கேக்க முடியல தேர்தல் ஆணையத்தால...

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்க்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் தேர்தலில் வெற்றிப் பெற திமுக சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் உள்ள பையில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதை வைத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது dmk.thiruvarur என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்டோபர் 18, 2025 அன்று பரவி வரும் வீடியோ இருக்கும் அதே புகைப்படம் இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் தீபாவளி திருநாளை முன்னிட்டு, கரூர் சொந்தங்களுக்கு அன்பு பரிசு வழங்கினார் செந்தில் பாலாஜி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பதை தேடினோம். அப்போது செந்தில் பாலாஜியின் தனி இணையதளப்பக்கத்தை பார்க்கமுடிந்தது. அதில் பரவி வரும் அதே புகைப்படத்துடன் பதிவு இருந்தது. தமிழகத்தின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இனிய நல்லாசியுடனும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துகளுடனும், என் சட்டமன்றத் தொகுதி மக்களின் நலனுக்காக, கரூர் மாவட்டம் கொடங்கிப்பட்டியில் நடைபெற்ற சிறப்பு தீபாவளிப் பரிசு வழங்கும் விழாவை தொடங்கி வைக்கும் பெருமையை நான் பெற்றேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, பரவி வரும் வீடியோ 2025ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பரிசு வழங்கிய தொகுப்பாகும். இதை தற்போது நடைபெறவுள்ள தேர்தலுக்காக வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் என்று தவறாகப் பரப்புகின்றனர்.