யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அது ‘ஏர்கன் வகை’ துப்பாக்கியாகும். அங்கீகரிக்கப்பட்ட உரிமத்துடன் சட்டப்படி அவற்றை ஒருவர் வைத்திருக்கமுடியும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இரவு கவரைப்பேட்டையில் சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதற்குக் காரணம், லூப் லைன் சந்திப்பில் போல்ட், நட் ஆகியவை கழற்றப்பட்டதுதான் என்று விசாரணை அதிகாரிகளால் கூறப்பட்டது. இதே போல், செப்டம்பர் மாதம் பொன்னேரியில் தண்டவாளத்தில் போல்ட் கழற்றப்பட்ட சம்பவம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் கோவிலுக்குச் சென்ற பக்தர், காவேரி நதிக்கரையில் ராக்கெட் லாஞ்சரைப் போன்றொரு உலோகப் பொருளைக் கண்டார். உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறை அந்த பொருளை கைபற்றி இராணுவத்திடம் ஒப்படைத்தனர். இதுபற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு, தற்போது ஒருவர் துப்பாக்கியுடன் தெருவில் நடந்து, பின்பு இருசக்கர வாகனத்தில் ஏறிச்செல்லும் காணொளியைப் பதிவிட்டு, அது ’ஸ்நைப்பர் துப்பாக்கி’ என்றும், தமிழ்நாட்டில் மக்களுக்குப் பாதுகாப்பில்லாத ஆட்சி நடைபெறுகிறது என்றும் பாஜக மற்றும் அதிமுகவினரால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், இது சம்பந்தமாக ’புதிய தலைமுறை’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியை காணமுடிந்தது. அந்த செய்தியின்படி, இந்தச் சம்பவம் திருப்பூரில் கைசார் கார்டன் பகுதியில் நடந்துள்ளது. திருப்பூர் மத்திய காவல்நிலைய போலீசார் இதனை விசாரணை செய்தபோது, அது ‘ஏர்கன் வகை (Air Gun)’ துப்பாக்கி என்றும் அதனைக் கொண்டு பறவைகளை வேட்டையாடியதும் தெரியவந்தது.

இந்த ஏர்கன் வகை துப்பாக்கி அழுத்தப்பட்ட காற்று அல்லது வாயுவைக் கொண்டு வேலை செய்யும். இதில் உந்துவிசைக்காக வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை.
மேலும் தேடுகையில், இந்த ‘ஏர்கன் வகை’ துப்பாக்கிகளை அங்கீகரிக்கப்பட்ட உரிமத்துடன் வைத்திருக்கச் சட்டத்தில் இடமுண்டு என்பது தெரியவருகிறது. 2016ஆம் ஆண்டிற்கு முன்பு வரை இந்த ஏர்கன் வகை துப்பாக்கியை பொம்மை கடைகளில் கூட வாங்கலாம். ஆனால், 2016ஆம் ஆண்டு ஆயுத விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட உரிமம் (License) இல்லாமல் ஏர்கன் வகை துப்பாக்கியை வாங்கமுடியாது என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டது.

இதிலிருந்து, இந்த ஏர்கன் வகை துப்பாக்கியை அங்கீகரிக்கப்பட்ட உரிமத்துடன் வைத்துக்கொள்வது சட்டத்தின்படி குற்றமல்ல என்பது தெரிகிறது. ஆனால், அதனைக்கொண்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வதும், பறவைகளை வேட்டையாடுவதும் குற்றமாகும். இது தொடர்பாக திருப்பூர் மத்திய காவல்நிலைய போலீசார், அந்த நபர்கள் மீது ’துப்பாக்கியுடன் சென்று பொது மக்களை அச்சுறுத்தியது மற்றும் பறவையை வேட்டையாடியது’ தொடர்பான வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பாஜக மற்றும் அதிமுகவினர் இதனை ’ஸ்நைப்பர் துப்பாக்கி’ என்று தவறான தகவல் பரப்புகின்றனர். மேலும், தண்டவாளத்தில் போல்ட், நட் ஆகியவை கழற்றப்பட்டது, ராக்கெட் லாஞ்சரைப் போன்றொரு பொருள் ஆற்றங்கரையில் கிடைத்தது ஆகிய விவகாரங்களுடன் இந்த துப்பாக்கி விஷயத்தை இணைத்து, திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கிறது, சட்டம் ஒழுங்கு சீர்கேடடைந்திருக்கிறது என்றும் கருத்துருவாக்கம் செய்யும் வகையில் பரப்புகின்றனர்.
முடிவு:
இந்த வீடியோவில் இருப்பது ’ஸ்நைப்பர் துப்பாக்கி’ என்று பரப்பப்படும் தகவல் தவறானதாகும். அது ‘ஏர்கன் வகை’ துப்பாக்கியாகும். அங்கீகரிக்கப்பட்ட உரிமத்துடன் அவற்றை வைத்திருக்கச் சட்டத்தில் இடமுண்டு.
