யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கொளத்தூர் தொகுதியில் பேட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் மு.க.ஸ்டாலின். பதிவான வாக்குகளில் ஸ்டாலின் பெற்ற வாக்குகள் 61.4 சதவீதமாகும்.
பரவிய செய்தி
’ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 1 லட்சம் வாக்காளர்கள் SIR-ல் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த போலி வாக்காளர்களை வைத்துக்கொண்டு தான் ஸ்டாலின் வெற்றிபெற்றிருக்கிறார்’ - எடப்பாடி பழனிச்சாமி.
விரிவான விளக்கம்
சேலம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ‘திமுகவில் இறந்துபோனவர்கள் கூட குழியிலிருந்து எழுந்து வந்து ஓட்டுப் போடுவார்கள். ஆனால் இதனை இப்போது தடுத்து நிறுத்தியாச்சு. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 1 லட்சம் வாக்காளர்கள் SIR-ல் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த போலி வாக்காளர்களை வைத்துக்கொண்டு தான் ஸ்டாலின் வெற்றிபெற்றிருக்கிறார். இதனை இப்போது நிறுத்தியாச்சு’ என்று கூறினார்.
"தேர்தல் வந்துட்டா போதும் குழியில இருந்து எந்திரிச்சி வந்துருவாங்க.. அதை இப்போ தடுத்து நிறுத்தியாச்சு.. இனி திருட்டு ஓட்டு போட முடியாது.. " - இபிஎஸ் பேச்சு..#Omalur | #EdappadiPalaniswami | #AIADMK | #ElectionCampaign | #PolimerNews pic.twitter.com/OcZuwcBNkV
உண்மை என்ன?
கொளத்தூர் தொகுதியில் SIR விவரங்கள் மற்றும் 2021 தேர்தல் முடிவுகள் குறித்த செய்திகளை தேடினோம். ‘புதிய தலைமுறை’ செய்தி ஒன்றில் SIR-ல் கொளத்தூர் தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை குறித்த விவரங்களைக் காணமுடிந்தது.
அதன்படி, SIR-க்கு முன்பு அதாவது 2021 தேர்தலின் போது இருந்த வாக்காளர் பட்டியலில் 2,90,653 வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். SIR நடத்தப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 1,86,841 வாக்காளர்கள் மட்டுமே இருந்தனர். அதாவது முந்தைய பட்டியிலில் இருந்த 1,03,812 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியிலில் இடம்பெறவில்லை.

பின்னர் மீண்டும் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 2,07,251 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். அதாவது வரைவு பட்டியிலில் இடம்பெறாத 20,410 வாக்காளர் பின்னர் இறுதிப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
அதாவது, SIR மூலமாக கொளத்தூர் தொகுதியில் 83,402 வாக்காளர்கள் நீக்கப்படிருக்கிறார்கள். இதன்படி பார்த்தால் எடப்பாடி பழனிசாமி சொல்வதுபோல் கொளத்தூர் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டனர் என்பது பொய் என்று நிரூபணமாகிறது.

மேலும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் படி கொளத்தூர் தொகுதியில் 2,81,128 வாக்காளர்களில் 1,71,859 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். அதாவது 61.13% வாக்குகள் பதிவாகின. கிட்டதட்ட 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் பதிவாகவில்லை. மு.க.ஸ்டாலின் 1,05,522 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பதிவான வாக்குகளில் மு.க.ஸ்டாலின் பெற்ற வாக்குகள் 61.4 சதவீதமாகும்.
மேலும், கொளத்தூர் தொகுதியில் பேட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் மு.க.ஸ்டாலின். வெற்றிவித்தியாசமே 70,384 ஆக இருக்கும்போது, எடப்பாடி பழனிசாமி சொல்வதுபோல் மு.க.ஸ்டாலினுக்கு விழுந்த வாக்குகள் எல்லாம் போலியானது என்று கூறுவது திரிக்கப்பட்ட தகவலாகும்.
முடிவு:
SIR-ன் போது வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட எண்ணிக்கையை மட்டும் வைத்துகொண்டு, கொளத்தூர் தொகுதியில் போலி வாக்குகளால் மு.க.ஸ்டாலின் பெற்றதாக எடப்பாடி பழனிச்சாமி திரிக்கப்பட்ட தவறான தகவலை பரப்பியுள்ளார்.