யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முத்துகுமரன் பேசியதை திரித்து PoliTalk’s யூட்யூப் சேனல் தவறான தகவல் பரப்பிவருகிறது.
பரவிய செய்தி
"தமிழ்நாட்டில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்காங்க. 30 நாட்களில் நீங்க எப்படி எல்லாரு வீட்டுக்கும் போவீங்க?" - முத்துக்குமரன்
"30 நாட்களில் வேலையை முடிக்கப் போறோம் தேர்தல் ஆணையம் எங்கேயும் சொல்லல! ஆரம்பகட்ட தரவுகளை சேகரிப்பதற்குதான் 30 நாட்கள். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி ஏழாம் தேதி வருது" - PoliTalk’s
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி ’வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR)’ என்னும் நடைமுறையை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீடு வீடாக சென்று SIR படிவங்கள் (Enumeration forms) கொடுத்து நிரப்பி வாங்கும் பணி நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பேச்சாளர் முத்துகுமரன் SIR குறித்து பேசியுள்ள வீடியோவில், ”தமிழ்நாட்டில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்காங்க. 30 நாட்களில் நீங்க எப்படி எல்லாரு வீட்டுக்கும் போவீங்க?” என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் விதமாக PoliTalk’s என்ற யூட்யூப் தளத்தில் பேசியவர், ”30 நாட்களில் இந்த வேலையை முடிக்கப் போறோம் தேர்தல் ஆணையம் எங்கேயும் சொல்லவில்லை ! ஆரம்பகட்ட தரவுகளை சேகரிப்பதற்கு தான் 30 நாட்கள். இறுதி வாக்காளர் பட்டியல் வருவதற்கு பிப்ரவரி ஏழாம் தேதி வரை கால அவகாசம் உள்ளது” என்று கூறுகிறார்.
உண்மை என்ன?
முத்துக்குமரன் பேசும்போது, தமிழ்நாடு முழுவது உள்ள 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களிடம் எப்படி ஒரு மாதத்திற்கு வீடு வீடாகச் சென்று படிவம் நிரப்பி வாங்குவீர் என்று தெளிவாக கேட்கிறார். அதாவது, அவர் SIR கணக்கீட்டு படிவங்கள் (Enumeration forms) நிரப்பும் பணியைப் பற்றி மட்டுமே பேசுகிறார்.
ஆனால், PoliTalk’s யூட்யூப் தளத்தில் பேசும் நபர் பிப்ரவரி ஏழாம் தேதி வரை கால அவகாசம் உள்ளதாக கூறுகிறார். அதாவது, பிப்ரவரி ஏழாம் தேதிக்குள் ஒருவர் எப்போது வேண்டுமானால் வாக்காளர் பட்டியலில் இணைந்துகொள்ளும் விதத்தில் படிவங்களை சமர்ப்பிக்கலாம் என்ற பொருளில் பேசுகிறார்.

ஆனால் தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, SIR படிவங்கள் நிரப்பி வாங்கும் பணியை 04.11.2025 முதல் 04.12.2025 வரையுள்ள ஒரு மாத காலத்தில் முடிக்கவேண்டும். இந்த ஒரு மாத காலத்தில் தங்கள் பகுதிக்கு வரும் BLO-க்களிடமோ அல்லது இணைய வழியிலோ படிவங்களை சரியாக நிரப்பி சமபர்பித்த நபர்களின் பெயர்கள் மட்டும் தான் 09.12.2025 அன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.

இவ்வாறு குறித்த காலத்தில் படிவத்தை நிரப்ப முடியாதவர்கள், வாக்காளர் பட்டியலில் இணைவதற்காக ’படிவம் 6’-ஐ நிரப்பி சமர்பிக்க வேண்டும். இதையும் வரைவு வாக்காளர் பட்டியல் மீதான 'கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள்’ முன்வைக்க தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள 09.12.2025 முதல் 08.01.2026 வரையிலான ஒரு மாத காலத்திற்கு செய்து முடிக்கவேண்டும். இதையெல்லாம் சேர்த்துதான் பிப்ரவரி ஏழாம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதிலிருந்து SIR கணக்கீட்டு படிவங்கள் (Enumeration forms) நிரப்பி சமர்பிக்கும் பணி முழுவையும் ஒரு மாதத்தில் முடிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் சொல்லியிருப்பது தெளிவாக நிரூப்பிக்கப்படுகிறது.
முடிவு:
6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று எப்படி ஒரு மாத காலத்தில் SIR படிவங்களை நிரப்பமுடியும் என்று முத்துகுமரன் பேசியதை திரித்து, பிப்ரவரி வரை கால அவகாசம் இருப்பதாக PoliTalk’s யூட்யூப் சேனல் தவறான தகவலை பரப்பி வருகிறது.