யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இஸ்லாமிய ஓட்டுரிமையை சிங்கப்பூர் பிரதமர் ஒத்தி வைத்ததாக பரவும் தகவல் உண்மை அல்ல
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
“சிங்கப்பூர் பிரதமர் தனது நாட்டைக் காப்பாற்ற இஸ்லாமிய மக்களின் ஓட்டுரிமையை ஒத்தி வைக்க திட்டம், இந்தியாவின் அவல நிலை கண்டு சிங்கப்பூர் உஷாராகிறது, இந்தியாவில் மாநிலங்களே தேச விரோத செயல்களில் ஈடுபடுகின்றன” என 0:14 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளப்பக்கங்களில் பரவி வருகின்றது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவில் TOI Live என்ற வாட்டர் மார்க் இருந்ததை பார்க்க முடிந்தது. இதனை தொடர்ந்து Times Of India -வின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் தேடியதில் பரவி வரும் வீடியோ கட்சிகளை குறிப்பிட்டு கடந்த மே 1 அன்று செய்தி வெளியிட்டிருப்பதை பார்க்க முடிந்தது.
அச்செய்தியில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் பேசுகையில், “கடந்த சில நாட்களாக மத மற்றும் இனம் சார்ந்து வாக்களிக்குமாறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், உள்நாட்டிலும் கூட இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தின் நலன்களை முன்னேற்றும் நபர்களுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இதனை நாம் நிராகரிக்க வேண்டும்.
இதேபோல், இந்து, பௌத்த, கிருஸ்த்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் சொன்னாலும், நாம் அதனை நிராகரிக்க வேண்டும்“ என்றார். இவ்வாறு, மத மற்றும் இனம் சார்ந்து வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்யப்படுவதை கண்டித்து பேசினார் சிங்கப்பூர் பிரதமர்.
மேலும், இந்த உரையில், சமூக ஒற்றுமை, வெளிநாட்டு தலையீடு, மற்றும் மதவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற முக்கியமான அம்சங்கள் பேசப்பட்டுள்ளன.
இதனைத்தான் சிலர் திரித்து, இஸ்லாமிய ஓட்டுரிமையை சிங்கப்பூர் பிரதமர் ஒத்தி வைத்ததாக தவறாக பரப்புகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், இஸ்லாமிய ஓட்டுரிமையை சிங்கப்பூர் பிரதமர் ஒத்தி வைத்ததாகப் பரவும் தகவல் உண்மையானது அல்ல என்பது தெளிவாகிறது.
