யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சமீபத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தக் கோரி அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி சொன்னதையடுத்தே, தமிழ்நாட்டில் இவ்வாறு அறிக்கை வெளியிடப்பட்டதாகக் கூறி பாஜகவினர் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
தமிழில் கையெழுத்து போடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி சொன்னதை, செயல்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
விரிவான விளக்கம்
சமீபத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தக் கோரி அரசாணை ஒன்று ஏப்ரல் 14, 2025 அன்று வெளியிடப்பட்டது. அவ்வறிக்கையில், அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்படல் வேண்டும், சுற்றாணைக் குறிப்புகள், வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் அனைத்தும் தமிழிலேயே இருக்கவேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் உட்பட பல அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழில் கையெழுத்து போடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி சொன்னதையடுத்தே, தமிழ்நாட்டில் இவ்வாறு அறிக்கை வெளியிடப்பட்டதாகக் கூறி பாஜகவினர் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
தமிழில் கையெழுத்து போடுங்கள் என பிரதமர் திரு.@narendramodi அவர்கள் சொன்னதை, செயல்படுத்திய முதல்வர் @mkstalin pic.twitter.com/UsnjxphVy8
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தமிழ்நாட்டில் இதற்கு முன்பு கடந்த 2021 லேயே இது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.
“Tami Iindian Express” ஊடகப் பக்கத்தில் கடந்த 2021 டிசம்பர் 10 அன்று இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “தமிழக முதலமைச்சர் முதல் இளநிலை பணியாளர்கள் வரை அரசு ஊழியர்கள் தமிழில் இனிஷியல் மற்றும் கையொப்பத்தை எழுத வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை அரசாணை (ஜிஓ) வெளியிட்டுள்ளது. இந்த புதிய அரசாணை 1978 மற்றும் 1998ல் இது தொடர்பாக வெளியிடப்பட்ட முந்தைய அரசாணைகளையும், 1997ல் வெளியிடப்பட்ட அரசாங்கக் கடிதத்தையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளது “ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
மேலும் இது குறித்து கடந்த 2021-ல் “தமிழ் முரசு“ ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும், “முன்னெழுத்து, கையெழுத்து ஆகியவற்றைத் தமிழில் எழுத வேண்டும் என்று 1978 மற்றும் 1998ல் பிறப்பிக்கப் பட்ட இரு உத்தரவுகளும் சரிவரப் பின்பற்றப்படவில்லை, எனவே மீண்டும் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது “ என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
இதன் மூலம் 1978 ஆம் ஆண்டிலும், பின்னர் சுமார் இருபது ஆண்டுகள் கழித்து 1998 செப்டம்பரில் தந்தை, தாய் மற்றும் ஊர் பெயர்களை இனிஷியலாக எழுதுவோர் அதனைத் தமிழிலேயே எழுத வேண்டும் என்று தமிழ்நாட்டில் அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசு உத்தரவிட்டது என்பதையும், இந்த இரு உத்தரவுகளும் சரிவரப் பின்பற்றப்படாததால் மீண்டும் கடந்த 2021-ல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது ஏப்ரல் 14, 2025 அன்று மீண்டும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், தமிழில் கையெழுத்து போடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி சொன்னதையடுத்தே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது அரசாணை வெளியிட்டுள்ளதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.