யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சென்னையில் தற்போது 383 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
பரவிய செய்தி
”அதிமுக ஆட்சியில் சென்னையில் கிட்டத்தட்ட 500 அம்மா உணவகங்கள் இருந்தது. தற்போது 150 அம்மா உணவகங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது” - S.G.சூர்யா, பாஜக இளைஞரணித் தலைவர், தமிழ்நாடு.
விரிவான விளக்கம்
’மாலை முரசு’ ஊடகம் நடத்திய ‘மக்கள் அரங்கம்’ என்னும் விவாத நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பாஜக-வின் இளைஞரணித் தலைவர் S.G.சூர்யா, ’முந்தைய அதிமுக ஆட்சியின் போது சென்னையில் 500 அம்மா உணவகங்கள் இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் சென்னையில் 150 அம்மா உணவகங்கள் தான் செயல்பாட்டிலிருக்கிறது’ என்று பேசினார்.
உண்மை என்ன?
சென்னையில் அம்மா உணவகங்கள் பற்றிய செய்திகளைத் தேடிய போது, ‘தினத்தந்தி’ செய்தித்தளத்தில் கடந்த மார்ச் மாதம் வெளிகாகியிருந்த ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2013 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன என்றும் தற்போது 383 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த 2025 செப்டம்பர் மாதம் ’மாலை மலர்’ வெளியிட்டுள்ள செய்தியிலும், சென்னையில் 383 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஜனவரி மாதம் ‘DT NEXT’ ஆங்கில செய்தித்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘அதிமுக ஆட்சியில் 407 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வந்ததாகவும்; அவற்றில் பழைய கட்டிடங்களில் செயல்பட்டு வந்த சில அம்மா உணவகங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுவிட்டது என்றும், தற்போது 388 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருவதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, சென்னையில் கிட்டத்தட்ட 380 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.
முடிவு:
சென்னையில் தற்போது 383 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை மறைத்து, 150 அம்மா உணவகங்கள் மட்டுமே செயல்பட்டு வருவதாக பாஜகவைச் சேர்ந்த S.G.சூர்யா பொய்யான தகவலை பேசி வருகிறார்.